அக்டோபர் 26 முதல் நவம்பர் 1ம் தேதி வரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு வாரம் கொண்டாடப்பட்டது. இந்த வாரத்தில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் ஊழலுக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக்கொண்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதற்காக அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் சார்பில் கோவை கவுண்டம் பாளையத்திலுள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலகத்தில் ஏ.டி.எஸ்.பி. திவ்யா, இன்ஸ்பெக்டர்கள் சுந்தர்ராஜன், ரவிச்சந்திரன், பரிமளாதேவி, எழிலரசி, சப்-இன்ஸ்பெக்டர் சரவணபிரசாத் மற்றும் காவலர்களை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
தொடர்ந்து ஏ.டி.எஸ்.பி திவ்யா பேசும்போது, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடையே ஊழல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு கட்டாயம் ஏற்படுத்த வேண்டும்.
அப்போதுதான் மாணவர்கள் அதிகாரிகளாகவும், தொழில் அதிபர்களா கவும் உயரும்போது, நல்ல சமுதாயம் உருவாகும். அதே போல நாம் ஊழலும் செய்யக்கூடாது, ஊழலுக்கு துணைபோகவும் கூடாது என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆர்.கே.குமார், பொதுச்செயலாளர் வி.எச். சுப்பிரமணியம், துணைத்தலைவர் எஸ். என். பாலசுப்பிரமணியன், மகளிர் அணி செயலாளர் ஆர். முத்தமிழ் செல்வி, செயற்குழு உறுப்பினர் கோவை சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்



