உடுமலையில் பாலத்தில் கார் மோதிய விபத்தில், கிருஷ்ணகிரி அரசு டாக்டர் உட்பட இருவர் இறந்தனர். கிருஷ்ணகிரி ஊத்தங்கரையைச் சேர்ந்த பூபாலன் மனைவி காவ்யா(28), சீத்தமலை அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தார்.
அவரது தந்தை சக்திவேல் (60), தாய் விஜயராணி (54), தாத்தா பொன்னுவேல் (85), பாட்டி பாப்பு (75) ஆகியோருடன் உடுமலையில் உறவினர் வீட்டு திருமண விழாவுக்கு வந்துள்ளனர்.
விழா முடிந்து நேற்று மதியம் காரில், சொந்த ஊருக்குச்சென்று கொண்டிருந்தனர். காரை டாக்டர் காவ்யா ஓட்டினார். உடுமலை – திருப்பூர் ரோட்டில், ஏரிப்பாளையம், தானியக்கிடங்கு பகுதியில், எதிரே வந்த வாகனத்தின் மீது மோதுவதை தவிர்க்க, காரை இடதுபுறம் திருப்பியுள்ளார்.
அப்போது, நிலை தடுமாறி, ஓடை தரைப்பாலத்தின் பக்கவாட்டு சுவரில் மோதி, கார் ஓடையில் கவிழ்ந்தது. இதில், காரின் முன் பகுதி நொறுங்கி, காவ்யா மற்றும் முன் சீட்டில் அமர்ந்திருந்த, பொன்னுவேல் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
விஜயராணி, சக்திவேல், பாப்பு ஆகியோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். உடுமலை போலீசார் விசாரிக்கின்றனர்.



