கோவை கவுண்டம் பாளையம் அருகே பாம்பிடமிருந்து தன் எஜமானரை காப்பாற்ற முயன்ற நாய் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கவுண்டம் பாளையத்தையடுத்துள்ள ஜி.என்.மில்ஸ், வைலட் கார்டனில் உள்ள யமுனா வீதியில் குடியிருப்பவர் சுரேந்தர். இவர் பொமரேனியன் இனத்தைச் சேர்ந்த 12 வயதுடைய நாய் ஒன்றை வளர்த்து வந்தார்.
புதன்கிழமை இரவு 11 மணியளவில் இந்த நாய் தொடர்ந்து குரைத்துக் கொண்டே இருந்துள்ளது.
இதனைக்கண்ட சுரேந்தரின் தாயார் கதவை திறந்து வெளியே வந்து பார்த்துள்ளார்.
அப்போது அவரது காலின் அருகிலிருந்து 4 அடி நீளம் உள்ள பாம்பு ஒன்று, இருந்தது.அதனைப் பார்த்த நாய் குரைத்துக் கொண்டே பாம்பின் வாலை பிடித்து இழுத்துள்ளது.
அப்போது திடீரென அந்த பாம்பு திரும்பி நாயின் கண் மற்றும் காதில் கொத்தியுள்ளது. வலியால் துடித்த நாய் சிறிது நேரத்தில் விஷமேறி பரிதாபமாக இறந்தது. இதனைக் கண்டு அச்ச மடைந்த சுரேந்தர் உடனடியாக பாம்பை பிடிக்கும் குழுவினருக்கு தகவல் அளித்துள்ளார்.
பின்னர் அக்குழுவினர் வந்து பாம்பை பிடித்தனர். பின்னர் அது வனப்பகுதியில் விடப்பட்டது.
கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன் எனும் வகையைச் சேர்ந்த அந்த பாம்பினால் அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாருக்கும் எதுவும் ஆகவில்லை என்றபோதும் அவர் களை காப்பாற்றும் முயற்சியில் நாய் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



