கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு கற்பிக்கும் 4,335 ஆசிரியர்களில் 4,219 ஆசிரியர்கள் (98 சதவிகிதம்) கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 447 பள்ளிகள் திறக்கப்பட்டன என்று மாவட்ட ஆட்சியர் டாக்டர் வி.ஜெயசந்திர பானுரெட்டி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், ஜாகிர் வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி, வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியம், இராமாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட ஆட்சியர் டாக்டர் வி.ஜெயசந்திர பானுரெட்டி, நேற்று (செப்.1) 9 முதல் 12 -ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
முதல்வர் ஆணைக் கிணங்க, கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா நோய்த் தொற்றிலிருந்து, குழந்தைகள், மாணவ, மாணவிகளை பாதுகாக்கும் பொருட்டு அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டது.
மாணவ, மாணவிகளின் கற்றல் பாதிப்பு ஏற்படாமலிருக்க பள்ளிகள் மூலம் இணையவழி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.
தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்று குறைந்து வரும் நிலையில் மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களின் கற்றல் பாதிப்படையாமல் இருக்க 9 முதல் 12 -ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 1.9.2021 முதல் திறக்கப்படும் என முதல்வர் உத்தரவிட்டார்.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு உயர்நிலைப் பள்ளிகள் 166, அரசு மேல்நிலைப்பள்ளிகள் 106, அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி 1 பகுதி சுயநிதி பள்ளிகள் 7 இதரப் பள்ளிகள் 167 என மொத்தம் 447 பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்புகள், கல்லூரிகள் மற்றும் 1796 அங்கன்வாடி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு கற்பிக்கும் 4,335 ஆசிரியர்களில் 4,219 ஆசிரியர்கள் (98 சதவிகிதம்) கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். மீதமுள்ள 116 ஆசிரியர்கள் பல்வேறு உடல் உபாதைகள் காரணமாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை.
அனைத்து பள்ளிக ளுக்கும் வாரத்தில் 6 நாள் வேலை நாட்கள். 10 மற்றும் 12- ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு 6 நாட்களும் வகுப்புகள் நடைபெறும். ஒவ்வொரு வகுப்பறையிலும் 20 மாணவர்கள் மட்டுமே சமூக இடைவெளியை கடைபிடித்து அமர வைக்கப்படும்.
போதிய இடவசதி இல்லையெனில் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும். உயர்நிலைப் பள்ளிகளில் 9 மற்றும் 10-ம் வகுப்புகள் தினமும் செயல்படும்.
போதிய இடவசதி இல்லாத பள்ளிகளில் மட்டும் 9-ம் வகுப்பு சுழற்சி முறையில் செயல்படும். தனியார் பள்ளிகளில் மட்டும் பள்ளிக்கு வருகை புரிய இயலாத மாணவர்களுக்கு தொடர்ந்து இணையவழி வகுப்புகள் நடத்தப்படும். மாணவர்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும்.
மாணவர்கள் வகுப்பறைக்கு செல்லும் முன் கட்டாயமாக கிருமிநாசினி சோப்புகளைக் கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் அனைவரும் சோப்பு தவறாது பின்பற்ற வேண்டும்.
அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் கட்டாய மாக பள்ளித் தலைமை யாசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்ப ட்டவர்கள் 90 நாட்கள் கழித்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்கள் அதற்கான விலக்கு கோரும் சான்றினை சமர்ப்பிக்க வேண்டும்.
100 நாள் வேலை வாய்ப்புத் திட்டப் பணியாளர்களைக் கொண்டு பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள் சுத்தம் செய்ய வேண்டும். EMIS இணையதளத்தில் ஆசிரியர்களின் வருகைப் பதிவு கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் மருத்துவ உதவி மைய எண் மற்றும் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலைய அலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை தகவல் பலகையில் வைத்திருக்க வேண்டும்.
மாணவர்களுக்கு நாள்தோறும் உடல் வெப்பநிலை கண்காணித்து உரிய பதிவேட்டில் பராமரிக்க வேண்டும். தேவைப்படின் சிறப்பு முகாம் நடத்தி மாணவர்களின் உடல்நிலை ஆரோக்கியத்தை பரிசோதனை செய்ய வேண்டும்.
மாணவர்களுக்கு தொற்று ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கான இலவச பேருந்து பயண அட்டை பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் சத்து மாத்திரைகள் வழங்கப்பட வேண்டும்.
எனவே அனைத்து ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், மாணவ, மாணவியர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து கொரோனா நோய்த்தொற்று மூன்றாவது அலையிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் வி.ஜெயசந்திர பானுரெட்டி தெரிவித்துள்ளார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி, வட்டாட்சியர் பி.பிரதாப் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



