fbpx
Homeபிற செய்திகள்ஒரு லட்சம் புதிய மின் இணைப்புகள் நீலகிரி மாவட்டத்தில் பயனடைந்த 259 பேர்

ஒரு லட்சம் புதிய மின் இணைப்புகள் நீலகிரி மாவட்டத்தில் பயனடைந்த 259 பேர்

ஒரு இலட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இத்திட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 259 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு விவசாயம் செய்து பயனடைந்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் 07.05.2021 அன்று முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில், ஐந்து முக்கிய அரசாணைகளை பிறப்பித்தார். அனைவரும் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

எரிசக்தி துறையின் 2021-2022-ம் ஆண்டு மானியக் கோரிக்கையில் மாநிலத்தின் விவசாய உற்பத்தியினை பெருக்கி விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்குடன் ஒரு இலட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில், தமிழ் நாட்டிலேயே முதன்முறையாக இதுவரையிலும் இல்லாத அதிகபட்ச அளவாக இந்த ஆண்டு ஒரு இலட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்க முடிவெடுக்கப்பட்டு தமிழ்நாடு மின்வாரியம் – மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் ஆகியவற்றின் சார்பில் 1 இலட்சம் உழவர்களுக்கு புதிய இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தினை கடந்த 23.09.2021 அன்று முதல்வர் தொடங்கி வைத்தார்.

இத்திட்டம் ரூ.3025 கோடியில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது.
ஒவ்வொரு உழவரிடமிருந்து 10 குதிரைத்திறன் வரை உள்ள மின் மோட்டார்களுக்கு குதிரைத்திறன் ஒன்றிற்கு 50 ரூபாய் வீதமும் 10 குதிரைத் திறனுக்கு மேல் உள்ள மின் மோட்டார்களுக்கு ஒரு குதிரைத்திறனுக்கு 75 ரூபாய் வீதமும் ஆண்டு தோறும் கணக்கிட்டு வசூலிக்கப்பட்டு வந்தது.

தமிழ்நாட்டின் வேளாண் உற்பத்தியினை பெருக்கி உழவர்களின் நலனை மேம்படுத்தும் வகையில் 19.11.1990-ம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அனைத்து உழவர்களுக்கும் இலவச மின்சாரம் என்ற உன்னதமான அறிவிப்பினை அறிவித்தார். இத்திட்டத்தின் கீழ் 2001 முதல் 2011-ம் ஆண்டு வரை 372,389 வேளாண் மின் இணைப்புகள் வழங்கப்பட்டன.

நிறைவு
தேர்தல் அறிக்கையில் ‘சொல்வதைச் செய்வோம், செய்வதை சொல்வோம்’ என முதல்வர் தெரிவித்திருந்தார். அந்த வகையில் முதலமைச்சர் உழவர்களின் நலனை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலம் 29.03.2022 வரை தமிழ்நாடு முழுவதுமாக 1 இலட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கி நிறைவு செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் 21.10.2021 அன்று புதிய மின் இணைப்புகள் பெறுவதற்கான ஆணையினை விவசாயிகளுக்கு வழங்கினார்.

நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 259 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு விவசாயம் செய்து பயனடைந்து வருகின்றனர்.

விவசாயமும் செழித்தது லாபமும் பெருகியது
விவசாய மின் இணைப்பு திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெற்று பயனடைந்த விவசாயி எம்.எல்.கஜேந்திரன் தெரிவித்ததாவது:

எனக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். நான் ஸ்டோன்ஹவுஸ் பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு 10 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் உருளைக்கிழங்கு, காரட், பீட்ரூட் ஆகியவை பயிரிட்டு வருகிறேன். இலவச மின் இணைப்பு கோரி விண்ணப்பத்திருந்தேன்.

ஆனால் நீண்ட நாட்களாக மின் இணைப்பு கிடைக்கவில்லை. இதனால் மிகவும் சிரமமாக இருந்தது. மின்கட்டணமும் செலுத்தி கொண்டு இருந்தேன். இந்நிலையில் முதல்வர் விவசாயிகளுக்கு ஒரு இலட்சம் இலவச மின் இணைப்பினை வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்கள்.

இத்திட்டத்தின்கீழ் என்னுடைய நிலத்திற்கு தட்கல் (2021-2022) திட்டத்தின் கீழ் இலவச மின் இணைப்பு 26.01.2022 அன்று வழங்கப்பட்டது. மின் மோட்டார் மூலம் தினசரி தேவையான அளவு தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்து வருகிறேன்.

இந்த விவசாயம் மூலம் நல்ல இலாபமும் கிடைத்து வருகிறது. இலவசமாக மின் இணைப்பு வழங்கும் திட்டத்தினை அறிவித்து செயல்படுத்திய முதல்வருக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களின் நலன் காப்பதற்காகவும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காகவும் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கு நீலகிரி மாவட்ட விவசாயிகள் நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

படிப்புச் செலவை ஏற்க உதவியது
விவசாய மின் இணைப்பு திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெற்று பயனடைந்த விவசாயி ரமேஷ் தெரிவித்ததாவது:

எனக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். நான் கடநாடு ஆலட்டி பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு இரண்டரை ஏக்கர் நிலம் உள்ளது. அதில் உருளைக்கிழங்கு, காரட், பீட் ரூட் ஆகியவை பயிரிட்டு வருகிறேன்.

மின் மோட்டர் மூலம் தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்வதற்கு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ரூ.7000/- முதல் ரூ.12000/- வரை செலவாகும்.
இதனால் பிற செலவுகளை மேற்கொள்ள மிகவும் சிரமமாக இருந்தது.

இந்நிலையில் நல்ல தருணத்தில் முதல்வர் விவசாயிகளுக்கு ஒரு இலட்சம் இலவச மின் இணைப்பினை வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.

இத்திட்டம் குறித்து நான் தெரிந்து கொண்டு உடனடியாக இலவச மின் இணைப்பு கோரி விண்ணப்பித்தேன். இத்திட்டத்தின் கீழ் என்னுடைய நிலத்திற்கு இலவச மின் இணைப்பு கிடைத்து ஒன்பது மாதங்களாகிறது.

இதன் மூலம் மின் மோட்டார் மூலம் தினசரி தேவையான அளவு தண்ணீர் பாய்ச்சி நல்ல முறையில் விவசாயம் செய்து வருவதோடு, மின்கட்டண செலவும் மீதமானது.

இந்த தொகை எனது குழந்தைகளின் படிப்பு செலவிற்கு மற்றும் குடும்ப செலவினை மேற்கொள்ள மிகவும் உதவியாக உள்ளது. இத்திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி, விவசாயிகளின் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்த முதல்வருக்கு விவசாயிகளின் சார்பில் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

தொகுப்பு:
நி.சையத்முகம்மத்
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்
இரா.சரண்
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி)
நீலகிரி மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img