fbpx
Homeபிற செய்திகள்இந்தியாவின் சிறந்த 75 நகர்ப்புற பகுதிகளில் இடம் பெற்ற கோவையின் 4 இடங்கள்

இந்தியாவின் சிறந்த 75 நகர்ப்புற பகுதிகளில் இடம் பெற்ற கோவையின் 4 இடங்கள்

மத்திய அரசு வெளியிட்ட இந்தியாவின் சிறந்த 75 நகர்ப்புற பகுதிகளில் கோவை மாநகராட்சியின் 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் தெரிவித்தார்.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மத்திய மண்டல அலுவலகத்தில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் முன்னிலை வகித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

போலந்து நாட்டில் நடைபெற்ற உலக நகர்ப்புற மன்றத்தின் கூட்டத்தில் உலகத்தில் உள்ள பெரிய நகரங்கள் சார்பில் ஸ்டால்கள் அமைத்து நகரமைப்பு தொடர்பான சிறப்புத் திட்டங்கள் உலகின் பெரிய நகரங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள புதிய திட்டங்கள், கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.

பொலிவுறு நகரத் திட்டம் சம்பந்தமாக நடைபெற்ற அமர்வில் இந்தியாவில் இருந்து கோவை, புவனேசுவரம், கொச்சி மாநகராட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றோம்.

இதில் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய நகரங்களை அமைத்தல், பசுமை பகுதிகளை அதிகரித்தல், உள்கட்டமைப்புகளை ஏற்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன.

போலந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் பாரம்பரியம் மாறாமல் கட்டிடங்கள் வடிவமைப்பட்டுள்ளன. இதேபோல கோவையிலும் பாரம்பரிய கட்டிடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

மத்திய அரசு வெளியிட்ட இந்தியாவின் சிறந்த 75 நகரங்கள் பட்டியலில் கோவை வாலாங்குளம், உக்கடம் பெரியகுளம், ரேஸ்கோர்ஸ், ஆர்.எஸ்.புரம், டி.பி.சாலை ஆகிய 4 இடங்கள் இடம்பெற்றுள்ளன.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் பசுமையாகவும், சுகாதாரமாகவும் இருக்கும் வகையில் 100 வார்டுகளிலும மியாவாக்கி முறையில் அடர் வனம் அமைக்க அறிவுறுத்தப்பட்டு 20 வார்டுகளில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

கோவையில் கடந்த 4 மாதங்களில் மட்டும் ரூ.4 கோடி தொழில் வரி வசூலிக்கப்பட்டுள்ளது. கட்டிட அனுமதியை விரைவில் வழங்கும் வகையில் பொறியாளர்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

கூடிய வரை 30 நாள்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி சார்பில் விரைவில் பொது மக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படும் என்றார்.

கூட்டத்தில் துணை மேயர் வெற்றிச்செல்வன், மத்திய மண்டலத் தலைவர் மீனா லோகு, குழுத் தலைவர்கள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img