சமூக அளவிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கிய ஆதிதிராவிட மாணவர்களுக்கு, ஒன்றாம் வகுப்பு முதல் முதுநிலை ஆராய்ச்சி மற்றும் முனைவர் பட்டப்படிப்பு வரை பல்வேறு கல்வி உதவித்தொகைத் திட்டங்கள் முதலமைச்சர் வழிகாட்டுதலில், ஆதிதிராவிடர் நலத்துறைமூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் கிருஷ்ணன் கோவில் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி, இராஜபாளையம் வட்டம் சுந்தரராசபுரம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, விருதுநகர் மேல்நிலைப்பள்ளி அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதி, விருதுநகர் சத்திரப்பட்டி ஊராட்சியில் உள்ள அரசு கல்லூரி மாணவிகள் விடுதி ஆகிய விடுதிகள் மற்றும் பள்ளிகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழிசெல்வராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த செய்தியாளர் பயணத்தின் போது ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது: ஆதிதிராவிடர் மக்கள் பெரும்பாலானோர் பொருளாதாரத்தில் பின் தங்கிய சமூகத்தின் விளிம்பில் உள்ளனர்.
அதிகமான குடும்பங்கள் வசதி வாய்ப்புகள் இன்றி உள்ளதோடு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வருவாய் ஈட்டும் வழிகளில் பல திட்டங்கள் வகைப்படுத்தப்பட்டு வருகிறது.
சமூக அளவிலும் பொருளாதார அளவிலும் பின்தங்கிய ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ இனத்தை சார்ந்தவர்களை சமூக, பொருளாதார முன்னேற்றமடைய செய்ய சிறந்த வழி அவர்களுக்கு உரிய கல்வியளித்து அவர்களை சுய சார்புடையவர்களாக மாற்ற வேண்டும்.
இந்த உயரிய நோக்குடன் இப்பிரிவினைச் சார்ந்த மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் முதுநிலை ஆராய்ச்சி மற்றும் முனைவர் பட்டப்படிப்பு வரை பல்வேறு கல்வி உதவித்தொகைத் திட்டங்கள் முதலமைச்சர் வழிகாட்டுதலில், ஆதிதிராவிடர் நலத்துறைமூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கிருஷ்ணன் கோவில் ஆதிதிராவிட விடுதியில் 60 மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். இந்த விடுதியில் தேவைப்படும் வசதிகள் செய்து விடுதியின் தரம் மேம்படுத்தப்படும். தமிழக அரசு 85 சதவிகிதத்திற்கு மேல் பட்ஜெட்டில் கல்வி மற்றும் கல்வி சார்ந்த திட்டங்களுக்காக செயல்படுத்தி வருகிறது.
பள்ளி மற்றும் விடுதிகளின் தரத்தை மேம்படுத்தி, ஆதிதிராவிடர் மாணவர்களின் கல்வி கற்கும் விகிதத்தை அதிகப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில், மாவட்டத்தில் உள்ள அரசு ஆதிதிராவிட நல மாணவர்களின் விடுதி மற்றும் ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு குடிநீர் வசதி, தங்கும் இட வசதி அவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் உள்ளிட்ட வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.
பின்னர், அரசு பள்ளி மற்றும் விடுதிகளின் கட்டிட உறுதி தன்மை, கழிப்பறை வசதி, இருப்பிட வசதி ஆகிய வசதிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு, மாணவர்களுக்கு உரிய வசதி ஏற்படுத்திட சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அரசு ஆதிதிராவிட நல பள்ளிகள் மற்றும் விடுதிகளில் மாணவர்களின் பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா எனவும், மாணவர்களுக்கு விடுதிகளில் மின்சார வசதி தடையில்லாமல் கிடைப்பதற்கும், மழைக்காலங்கள் என்பதால் மாணவர்களின் பாதுகாப்பு வசதிகளை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உடனடியாக முதலுதவி கிடைக்கப் பெறுவதற்கும், விடுதிகள் மற்றும் பள்ளிகளுக்கு அருகிலேயே மருத்துவ வசதிகள் கிடைக்க பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு ஆதிதிராவிடநலத் துறை அமைச்சர் தெரிவித்தார்.
ஆதிதிராவிட நலத்துறை ஆணையர் எஸ்.மதுமதி, மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி, இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.தங்கபாண்டியன், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக, அரசு ஆதிதிராவிட நல பள்ளிகள் மற்றும் விடுதிகளில் உள்ள மாணவர்களுக்கு பொது அறிவு புத்தகங்கள், அகராதிகள், தினசரி நாளிதழ்கள் ஆகியவற்றை விடுதியில் மாணவர்கள் பயன்படுத்தி அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், அரசு ஆதிதிராவிட நலப்பள்ளிகள் மற்றும் விடுதிகளில் உள்ள மாணவர்கள் உயர்கல்வி பயில அவர்களுடைய இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டும், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வை எதிர்கொள்ள ஏதுவாக மாலை நேர சிறப்பு பயிற்சி வழங்கவும், சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் வழங்கினார்.
பின்னர், பள்ளி, கல்லூரி மாணவிகள் தங்கும் விடுதி மற்றும் பள்ளியில் அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் வசதிகள் குறித்தும், கல்வி கற்பதற்கு தேவைப்படும் கூடுதல் வசதிகள் குறித்தும் கேட்டறிந்து, நல்ல முறையில் கல்வி பயின்று வாழ்க்கையில் முன்னேறி அரசிற்கும், பெற்றோர்களுக்கும் நல்ல பெயர் பெற்றுதர வேண்டும் என அமைச்சர் கயல்விழிசெல்வராஜ் தெரிவித்தார்.
இந்த பயணத்தின் போது, சார் ஆட்சியர் (சிவகாசி) பிருத்திவிராஜ், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் புஷ்பா, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் (பொ) சிவக்குமார், விருதுநகர் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் சுமதி, இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியகுழுத் துணைத்தலைவர் துரைகற்பகராஜ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் முத்துசெல்வி, வட்டாட்சியர்கள் மாதா (வத்திராயிருப்பு), ராமச்சந்திரன் (இராஜபாளையம்) உட்பட பலர் கலந்து கொண்டனர்.



