கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஒற்றர்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட கிராம நிர்வாக அலுவலகத்திற்கு கோபரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் சொத்து விவரங்களுக்கான ஆவண சரிபார்ப்புக்காக வந்துள்ளார்.
அப்போது ஆவணங்கள் சரியான முறையில் இல்லாததால் முறையான ஆவணங்களை கொண்டுவரும்படி விஏஓ கலைச்செல்லி கூறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த கோபிநாத் விஏஓ கலைச்செல்வியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
அப்போது குறுக்கிட்டு தடுத்த பட்டியலின சமூகத்தை சேர்ந்த உதவியாளர் முத்துசாமியை கோபிநாத் மிரட்டியதுடன், ஊரில் இருக்க முடியாது, பொய்புகார் கூறி வேலையை காலி செய்துவிடுவேன் என சாதிப்பெயரை குறிப்பிட்டு தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கு மாறு கூறியுள்ளார்.
கோபிநாத்தின் மிரட்டலால் அதிர்ச்சி அடைந்த கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் முத்துசாமி, மேசை மீது அமர்ந்திருந்த கோபிநாத் முன் தரையில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து மன்னித்து விட்டதாகவும், தனது மீதும் தவறு இருப்பதாகவும் கோபிநாத் கூறும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானதால் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து அரசு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அலுவலகங்கள், கல்விக் கூடங்களில் நடக்கும் சாதிய வன்கொடுமைகளை தடுக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் அரசுக்கு வலியுறுத்தி உள்ளனர்.
இதற்கிடையே ஒற்றர்பாளையம் கிராமநிர்வாக அலுவலர் அலுவலகத்தில் நிகழ்ந்த சாதிக் கொடுமை குறித்து விஏஓ அலுவலகத்துக்கு ஆர்.டி.ஓ நேரில் சென்று விசாரிக்க மாவட்ட வருவாய் அலுவலர் லீலா உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், காலில் விழ வைத்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்ய கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தர விட்டுள்ளார்.
கிராம உதவியாளரை காலில் விழ வைத்த சம்பவம் குறித்து விரிவாக விசாரிக்கப்படும் என்றார்.
மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். காவல்துறை வழக்குப்பதிவு செய்து, தெளிவான அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.



