அகில இந்திய போட்டியில் சாதனை படைத்த தமிழக வீரர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
அகில இந்திய அளவில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் தமிழக அணியில் திண்டுக்கல்லை சேர்ந்த 12 பேரும் பதக்கங்களை வென்றனர்.
இவர்களுக்கு ஊர் மக்கள் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லியில் அகில இந்திய அளவில் பளுதூக்கும் போட்டி கடந்த 14ஆம் தேதி நடைபெற்றது. அனைத்து மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர்.
தமிழகத்திலிருந்து ஆண்கள், பெண்கள் என 26 பேர் பங்கேற்றனர். அதில் திண்டுக்கல்லை சேர்ந்த 12 பேர் பங்கேற்றனர்.
சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் என மூன்று பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. தமிழக அணிக்காக கலந்து கொண்ட திண்டுக்கல் முத்தழகுபட்டியை சேர்ந்த 12 பேரும், முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசுகளை வென்று சாதனை படைத்துள்ளனர்.
முதல் இடத்தை பிடித்தவர்களுக்கு தங்க பதக்கமும் மற்றும் சான்றிதழும், இரண்டாமிடத்தை பிடித்தவர்களுக்கு வெள்ளிப் பதக்கமும் சான்றிதழும் மூன்றாம் இடத்தை பிடித்தவர்களுக்கு வெண்கல பதக்கமும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற அனைவரும் நேற்று ரயில் மூலம் திண்டுக்கல் வந்தனர்.
அவர்களுக்கு முத்தழகுபட்டியில் ஊர் எல்லையில் பொதுமக்கள் மற்றும் ஜிம் உரிமையாளர் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு மாலையணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
அகில இந்திய அளவில் வெற்றி பெற்ற ஜஸ்டின் தாஸ், பவுல் தனராஜ், சார்லஸ் டேவிட், டோம்னிக் செல்வராஜ் ஆகிய 4 பேர் ஆசிய அளவில் நடைபெறும் பளுதூக்கும் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்,



