Homeதலையங்கம்விசாரணை அறிக்கையால் வி.கே.சசிகலாவுக்கு சிக்கல்?

விசாரணை அறிக்கையால் வி.கே.சசிகலாவுக்கு சிக்கல்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அரசுக்கு அளித்துள்ள அறிக்கை ஆகியவற்றை தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசித்து முடிவு செய்யப்பட்டுள்ளது.

முக்கியமாக, ஆறுமுகசாமி ஆணையம் அளித்துள்ள அறிக்கையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவரது தோழி சசிகலா, அதிமுக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ், மருத்துவர் சிவகுமார் ஆகியோரை விசாரிக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரை குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து இதில் மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு முடிவு செய்ய உள்ளதாகவும், அந்த முடிவின்படி சம்பந்தப்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்படும் விசாரணை அறிக்கையுடன் சேர்த்து ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசின் இந்த முடிவால் ஜெயலலிதா மரண விவகாரத்தில் விசாரணை வளையத்துக்குள் சிக்கும் நிலை சசிகலாவுக்கு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து ஊடகங்களில் பேசும் சசிகலா, ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் விசாரணைக்கு ஆஜராகாதது ஏன்? என்று கேள்வி எழுப்பிவரும் நிலையில் சசிகலாவை விசாரிக்க அரசுக்கு ஆணையம் பரிந்துரைத்துள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சசிகலா உள்ளிட்டோர் மீது என்ன மாதிரியான நடவடிக்கை பாயும்? அது சசிகலாவின் தற்போதைய அரசியல் முன்னெடுப்புக்கு என்ன மாதிரியான சிக்கலை ஏற்படுத்தும்? என்ற பரபரப்பு தமிழக அரசியலில் தொற்றிக் கொண்டுள்ளது. குறிப்பாக அதிமுக வட்டாரத்தில் ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். என்ன தான் நடக்கப் போகிறது?

படிக்க வேண்டும்

spot_img