fbpx
Homeபிற செய்திகள்வசூல் இலக்கை எட்டிய வரிவசூலர்களுக்கு விருது கோவை மாநகராட்சி ஆணையாளர் வழங்கினார்

வசூல் இலக்கை எட்டிய வரிவசூலர்களுக்கு விருது கோவை மாநகராட்சி ஆணையாளர் வழங்கினார்

கோவை மாநகராட்சி ‘ஜனக்கிரஹா’ அமைப்புடன் இணைந்து முதன் முறையாக வரி தண்டலர்கள் மற்றும் உதவி வருவாய் அலுவலர்களுக்கு இடையே வரி வசூல் பணிகளை மேம்படுத்தும் பொருட்டு நடத்தப்பட்ட முனிசிபல் பிரிமியர் லீக் போட்டிகளில், உயர்ந்தபட்ச வசூல் இலக்கை அடைந்த வரி வசூலர்களுக்கான விருதுகளை, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா இன்று (டிச.30) வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்ததாவது:
கோவை மாநகராட்சி யின் 5 மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்துவரி, தொழில்வரி, வரியில்லா இனங்கள், குடிநீர் கட்டணம் போன்றவற்றின் கேட்பு தொகைகளை வசூல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, ஒவ்வொரு நிதியாண்டிலும் அதற்கான பணிகள் நடைபெறும்.

கோவை மாநகராட்சி ‘ஜனக்கிரஹா’ அமைப்புடன் இணைந்து மாநகராட்சி வரிவசூலர்கள் மற்றும் உதவி வருவாய் அலுவலர்களுக்கு இடையே வரிவசூல் பணிகளை மேம்படுத்தும் பொருட்டு, முனிசிபல் பிரிமியர் லீக் போட்டிகள் 2021 நவம்பர் 1-ம் தேதி முதல் துவங்கப்பட்டது.

இதில் நடப்பு 2021-&22-ம் நிதியாண்டு தொடங்கி நவம்பர் மாதம் வரை வரியில்லா இனங்கள் மற்றும் குடிநீர் கட்டண வசூல் பணிகளில் உயர்ந்தபட்ச வசூல் இலக்கை அடைந்த வரிவசூலர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

2021-22-ம் நிதியாண்டில் வரியில்லா இனங்களின் நடப்பு வசூலில், உயர்ந்தபட்ச வசூல் இலக்கை அடைந்த தெற்கு மண்டலம் சிவக்குமார், வெங்கடாசலம், கிழக்கு மண்டலம் துரைராஜ் நிலுவை வசூலில் உயர்ந்தபட்ச வசூல் இலக்கை அடைந்த வடக்கு மண்டலம் ஜெயக்குமார், தெற்கு மண்டலம் சிவக்குமார், கிழக்கு மண்டலம் துரைராஜ், குடிநீர் கட்டண வசூலில் உயர்ந்தபட்ச இலக்கை அடைந்த வடக்கு மண்டலம் ஜெயக்குமார், யமுனாதேவி, சுமதி, குடிநீர் கட்டண நிலுவை வசூலில் உயர்ந்தபட்ச இலக்கை அடைந்த தெற்கு மண்டலம் மலர்க்கொடி, ரமேஷ்குமார், மகேஸ்வரன் ஆகியோருக்கு சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன.

வரியில்லா இனங்களில் நடப்பு வசூலில் முதல் இடம் பிடித்த தெற்கு மண்டலம் சிவக்குமார், நிலுவை வசூலில் முதல் இடம் பிடித்த வடக்கு மண்டலம் ஜெயக்குமார், குடிநீர் கட்டண வசூலில் முதல் இடம் பிடித்த வடக்கு மண்டலம் ஜெயக்குமார், நிலுவை வசூலில் முதல் இடம் பிடித்த தெற்கு மண்டலம் மலர்க்கொடி ஆகியோருக்கு சாதனையாளர் விருதுடன் பரிசு கூப்பன்கள் வழங்கப்பட்டன. இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.மோ.ஷர்மிளா, மண்டல உதவி ஆணையாளர்கள் என்.அண்ணாதுரை (தெற்கு), செந்தில்குமார் இரத்தினம் (கிழக்கு) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img