ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றியம், கடுகு சந்தை கிராமத்தில் செய்தியாளர் பயணத்தின் போது தோட்டக்கலைத்துறை சார்பில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் தர்பூசணி சாகுபடி முறைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத் பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டு நீர்,மற்றும் தெளிப்பு நீர்,பாசனக் கருவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
குறைந்த நீரில் அதிக பரப்பு சாகுபடி செய்திட உதவும் உன்னத திட்டமான நுண்ணீர் பாசன திட்டமானது தமிழக அரசால் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இயற்கை நீர் வளம் குறைந்து கொண்டே வரும் இந்த சூழ்நிலையில் 40 முதல் 60% வரை நீர் சேமிக்கப்படுகிறது.பாரத நாட்டில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும் சிறு,குறு விவசாயிகளுக்கு (100 % மானியத்தில்) நுண்ணீர் பாசன அமைப்புகள் வழங்கப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் ரூ.85.07 இலட்சம் மதிப்பீட்டில் 428 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தில் புதிய தோட்டங்கள் அமைத்தல் இனத்தின் கீழ் வீரிய ஒட்டு ரக காய்கறிகள், மா, கொய்யா, பப்பாளி, மல்லிகை மற்றும் நறுமணப் பயிர்களுக்கு 40% மானியம் வழங்கப்படுகிறது.
பண்ணை இயந்திரமயமாக்கல் இனத்தின் கீழ் பவர் டில்லருக்கு 40 முதல் 60% மானியம் வழங்கப்படுகிறது.அறுவடைக்கு பிந்தைய மேலாண்மைக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள சிப்பம் கட்டும் அறை 50% மானியத்தில் வழங்கப்படுகிறது. தோட்டக்கலை பயிர்களுக்கான சந்தை உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த நடமாடும் விற்பனை வண்டி அமைக்க 50% மானியம் வழங்கப்படுகிறது.
தோட்டக்கலை பயிர்களில் மகரந்த சேர்க்கையை அதிகபடுத்தும் இனத்தின் கீழ் தேனீ பெட்டி,தேனீ குடும்பம் மற்றும் தேன் பிழிந்து எடுக்கும் கருவி 50% மானியத்தில் வழங்கப்படுகிறது.
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் பொருட்டு விவசாயிகளுக்கு ஊக்க தொகை வழங்கப்படுகிறது. தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நீர் ஆதாரத்தை உருவாக்க பண்ணைக்குட்டை அமைக்கும் திட்டம் 50 % மானியத்தில் வழங்கப்படுகிறது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் ரூ.166,79 இலட்சம் மதிப்பீட்டில் 1324 பயனாளிகள் பயனடைந்துள்ளனர் என செய்தியாளர் பயணத்தின் போது மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத் தெரிவித்தார்.
இச்செய்தியாளர் பயணத்தின் போது கடலாடி ஊராட்சி ஒன்றியம்,கடுகு சந்தை கிராமத்தில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சுமார் 2 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள தர்பூசணி, கொய்யா மற்றும் முருங்கை தோட்டத்தினையும் தேசிய தோட்டக்கலை திட்டத்தின் கீழ் சுமார் 0.5 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள முருங்கை தோட்டத்தினையும் மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் நாகராஜன் ,உதவி இயக்குநர் டெலின்ஸ் அவர்கள், கடலாடி வட்டாட்சியர் சேகர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



