தமிழகத்தில் பிப்ரவரி 1 முதல் பள்ளிகளை திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த 7ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும் கடந்த 9, 16, 23 ஆகிய மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டது.
சனிக்கிழமை இரவு 10 மணியில் இருந்து திங்கட்கிழமை அதிகாலை 5 மணிவரை பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டது. வழிபாட்டு தலங்களுக்கு வெள்ளி, சனி ஞாயிறு ஆகிய 3 நாட்கள் பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை.
அரசு கொண்டுவந்த இந்த கட்டுப்பாடுகள் வருகிற 31ம் தேதி வரை அமலில் இருக்கும். ஆனாலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு குறித்து ஒவ்வொரு வாரமும் முதல்வர் தனியாக அறிவித்து வருகிறார்.
இந்த கட்டுப்பாடுகளால் கடந்த ஒரு வாரமாக தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது. சென்னையில் தொற்று குறையத்தொடங்கி உள்ளது. ஊரடங்கு கட் டுப்பாடுகள் முடிய இன்னும் 4 நாட்களே இருப்பதால் அடுத்தகட்ட ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் இதற்கான ஆலோசனை கூட்டம் இன்று காலை நடை பெற்றுள்ளது. இதில் சுகாதாரத்துறை நிபுணர் கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கொரோனா வேகம் குறைந்துள்ளதால் மீண்டும் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டுமா, ஞாயிறு முழு ஊரடங்கை தொடர வேண்டுமா அல்லது கட்டுப் பாடுகளுடன் தளர்வுகளை அமல்படுத்தலாமா என்பது குறித்து விவாதிக் கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில் பிப்ரவரி 1-ம் தேதியில் இருந்து 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க இந்த கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



