Homeதலையங்கம்முதல்வர் மு.க.ஸ்டாலின் உரைக்கு செவி சாய்ப்போம்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் உரைக்கு செவி சாய்ப்போம்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் சென்னை வான கரத்தில் நடைபெற்ற தென்னிந்தியத் திருச்சபையின் (சிஎஸ்ஐ) பவள விழாவில் கலந்து கொண்டார். அந்த விழாவில் ஆற்றிய உரை தனித்துவம் வாய்ந்ததாக இருந்தது. அவர் பேச்சின் சாராம்சம்:

எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! – என்ற பைபிள் வாசகத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக என்பதை முழக்கமாக வைத்திருக்கிறீர்கள்.

இதுவே அனைவரது முழக்கமாக, எண்ணமாக மாறுமானால் நாடு அமைதி தவழும் பூமியாக இப்போது மட்டுமல்ல, எப்போதும் இருக்கும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகமில்லை.

இந்தியா என்பது பல்வேறு மதத்தவர் வாழ்கின்ற நாடு. வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். வாழ்கிறோம்.

அவரவர் மத நம்பிக்கை என்பது அவரவருக்குச் சொந்தமானதே தவிர, அடுத்தவருக்கு எதிரானதாக இருக்காது. இயேசு கிறிஸ்துவின் போதனைகள் பெரும்பாலும் அன்பைப் போதிப்பதாகத்தான் இருக்கின்றன.

உன்மீது நீ அன்பு கூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக என்றுதான் இயேசு கிறிஸ்து அவர்கள் கூறுகிறார். இயேசு கிறிஸ்து இந்த மனித குலத்துக்குக் கற்றுத்தந்த மதிப்பீடுகளை வரிசைப்படுத்தினால் சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, இரக்கம், நீதி, தியாகம், பகிர்தல் ஆகியவற்றைத்தான் சொல்ல முடியும்.

மனிதர்கள் அனைவரும் சமம் என்பதுதான் சமத்துவம். யாரையும் வேற்றுமையாகப் பார்க்காதே என்பதுதான் சகோதரத்துவம்.
அனைவருடனும் சேர்ந்து வாழ் என்பதுதான் ஒற்றுமை. ஏழைகள் மீது கருணை காட்டு என்பதுதான் இரக்கம்.

அநீதிக்கு எதிராக குரல் கொடு என்பதுதான் நீதி. மற்றவர்களுக்காக வாதாடு என்பதுதான் தியாகம் .உன்னிடம் இருப்பதை இல்லாதவருக்குக் கொடு என்பதுதான் பகிர்தல்.

இதைத் தான் கிறிஸ்தவம் சொல்கிறது. இத்தகைய குணங்கள் ஒவ்வொரு மனிதருக்கும் இருந்தால் அதுதான் சமத்துவ நாடாக அமையும்.

இவ்வாறாக, மத நல்லிணக்கம், வேற்றுமையில் ஒற்றுமை, சகோதரத்துவம், தியாகம், நீதி என எடுத்துரைத்தும் இடித்துரைத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி இருப்பது இந்த காலக்கட்டத்திற்கு… குறிப்பாக தமிழகத்தின் இன்றைய சூழலுக்கு மிகமிக பொருத்தமானது.

முதல்வரின் அறிவுரைக்குச் செவி சாய்ப்போம்!

படிக்க வேண்டும்

spot_img