fbpx
Homeபிற செய்திகள்‘முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம்’ 20,450 பேருக்கு ரூ.82.20 லட்சம் ஊட்டச்சத்து தளைகள் வழங்கல்

‘முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம்’ 20,450 பேருக்கு ரூ.82.20 லட்சம் ஊட்டச்சத்து தளைகள் வழங்கல்

முதலமைச்சரின் மாடித் தோட்டத் தளைகள் வழங்கும் திட்டத்தின் கீழ், சேலம் மாவட்டத்தில் உள்ள 20 வட்டாரங்களில் ரூ.82.20 இலட்சம் மதிப்பிலான ஊட்டச்சத்து தளைகள் 20,450 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இத்திட்டங்கள் தொடர்ந்து நடப்பாண்டிலும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழக மக்களின் நலனுக்காக எண்ணற்ற பல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். “உணவே மருந்து” என்ற அடிப்படையில் இரசாயன கலவைகள் இல்லாத இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

குறிப்பாக பொதுமக்கள் அன்றாடம் தங்களுக்குத் தேவையான காய்கறிகள், கீரைகள் மற்றும் மூலிகைச் செடிகளை தங்கள் இல்லங்களில் உள்ள இடவசதிக்கு ஏற்ப உற்பத்தி செய்து கொள்ளும் வகையில் செயல்படுத்தி வரும், “முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம் திட்டம்“ சேலம் மாவட்டத்தில் உள்ள இல்லத்தரசிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இயற்கை முறையில் காய்கறிகள்
ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ, நமது உணவில் ஒவ்வொரு நாளும் காய்கறி, பழங்கள் மற்றும் கீரைகள் உட்கொள்வதுடன் இயற்கை மூலிகைகளை பயன்படுத்தும் கட்டாயத்தில் உள்ளோம்.

இதனைக் கருத்திற்கொண்டு பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், இல்லத்தரசிகள் தங்களது வீட்டிலேயே இயற்கை முறையில் காய்கறி உற்பத்தி செய்திடவும், மூலிகை பயிர்களை வளர்க்கவும் முதல்வர், வேளாண் நிதிநிலை அறிக்கை 2021-22-ம் ஆண்டில் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையால் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்து தளைகள் வழங்கும் திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.

தினசரி 300 கிராம்
குறிப்பாக, தினசரி ஒருவரின் காய்கறி தேவை 300 கிராம் என்ற அளவில் கணக்கிடப்படுகிறது. மாடித்தோட்டம் அல்லது வீட்டு தோட்டத்தை அமைத்து அதன் வாயிலாக இரசாயனம் இல்லாத காய்கறிகளைப் பெறமுடியும்.

அந்தவகையில், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் மூலம் மானிய விலையில் ரூ.225-க்கு தென்னை நார் கட்டி, காய்கறி விதைகள், செய்முறை விளக்க கையேடு, வேப்பெண்ணை உள்ளிட்ட தோட்டத்திற்கு தேவையான பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இதனால் வீட்டுக்கு தேவையான இரசாயனம் இல்லாத காய்கறிகளை மாடித் தோட்டத்திலிருந்தே அறுவடை செய்து, வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். மாடித்தோட்டத்தை பராமரிப்பதால் மன அழுத்தம் குறைவதுடன், பொழுது போக்காகவும் அமைகிறது.

நகர்ப்புறங்களில்
சேலம் மாவட்டத்தில் நகர்ப்புறங்களில் மாடித் தோட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் ரூ.900 மதிப்புள்ள தளைகளை 75 சதவிகித மானிய விலையில் ரூ.225-க்கு தோட்டக்கலைத் துறையால் வழங்கப்பட்டு வருகிறது.

மாடித் தோட்டத் தளைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 6 வகையான காய்கறி விதைத் தளைகள், 6 செடி வளர்க்கும் பைகள், 12 கிலோ அளவிலான ஊட்டம் ஏற்றிய தென்னை நார்கள், 400 கிராம் உயிர் உரங்கள், 200 கிராம் உயிரி கட்டுப்பாட்டு காரணிகள், 100 மில்லி லிட்டர் இயற்கை பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் சாகுபடி முறைகளை விளக்கும் கையேடு ஆகியவை இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்றன. சேலம் மாவட்டத்தில் மாடித் தோட்டத் தளைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 4,600 நபர்களுக்கு 7,000 எண்ணிக்கையில் தளைகள் ரூ.63 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது.

12 வகையான தளைகள்
காய்கறி தோட்டம் அமைப்பதை ஊக்குவிப்பதற்காக ரூ.60 மதிப்புள்ள 12 வகையான காய்கறி விதைத் தளைகள் 75 சதவிகித மானிய விலையில் ரூ.15-க்கு வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் இதுவரை 8,000 நபர்களுக்கு 12,000 எண்ணிக்கையில் தளைகள் ரூ.7.20 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் 8 வகையான மூலிகைச் செடிகள் மற்றும் பழக்கன்றுகள், ரூ.100 மதிப்பிலான தளைகள் 75 சதவிகித மானிய விலையில் ரூ.25-க்கு வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் சேலம் மாவட்டத்தில் இதுவரை 7,850 நபர்களுக்கு 12,000 எண்ணிக்கையில் ரூ.12 இலட்சம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் மாடித் தோட்டத் தளைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் உள்ள 20 வட்டாரங்களில் ரூ.82.20 இலட்சம் மதிப்பிலான ஊட்டச்சத்து தளைகள் 20,450 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இத்திட்டங்கள் தொடர்ந்து நடப்ப £ண்டிலும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவர்களுக்கு தங்கள் பகுதியின் அருகாமையில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன்பெற்று வருகின்றனர்.

‘செழுமையான வளர்ச்சி
மனதுக்கு மிக்க மகிழ்ச்சி’
“முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம்“ திட்டத்தின் கீழ் பயனடைந்துவரும் சேலம், சுந்தரி அம்பாள் தெரு பகுதியைச் சேர்ந்த ராஜா (வயது 47) தெரிவித்ததாவது:

இயற்கை முறையில் விளையும் காய்கறிகளையும் கீரை வகைகளையும் உண்டு வந்தால் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மேலும் வலு சேர்க்கும். ஆனால் சில சமயம் சந்தைகளில் வாங்கப்படும் காய்கறிகள் அதிக விளைச்சலை நோக்கமாகக் கொண்டு பூச்சிக்கொல்லி மருந்துகளை உபயோகித்து விற்பனைக்கு வருகிறது.

அவ்வாறான காய்கறிகளை உண்ணும்போது சில சமயம் உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பாக அமையும் என்பதால் எனது சொந்த வீட்டின் மேற்புறம் மாடித்தோட்டம் மூலம் இயற்கை முறையில் காய்கறிகளை விளைவிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனது மகன் மற்றும் மனைவி உட்பட அனைவருக்கும் இருந்தது.

அதற்கான வழிகாட்டுதல்கள் ஏதும் இல்லாததால் இந்த எண்ணத்தை நீண்ட காலம் செயல்படுத்த முடியாமலேயே இருந்து வந்தது.

இந்நிலையில் நகர்ப்புறங்களில் வசிக்கும் பொதுமக்களின் நலன் கருதி 6 வகையான காய்கறி விதைகள் மானியத்தில் வழங்கப்படும். அதனை வளர்ப்பதற்கு தென்னை நார் கட்டிகள், உயிர் உரங்கள், இயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றை மானிய விலையில் முதல்வர் வழங்க உத்தரவிட்டுள்ளார் என்பதை நாளிதழ்களில் பார்த்தேன்.

இது சம்பந்தமாக எனது பகுதியில் உள்ள வட்டார தோட்டக்கலை அலுவலரை அணுகி காய்கறி விதைகளை வாங்கி உடனடியாக வீட்டின் மாடியில் இயற்கை முறையில் தோட்டத்தினை அமைத்தேன்.

ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததும் நேராக மாடிக்கு சென்று விதைத்த விதைகள் செழுமையாக வளர்ந்து வருவதை பார்த்து, மிகுந்த மகிழ்ச்சி அடைவோம்.

இரண்டு மாதங்களுக்கு பின்னர் எங்களின் அன்றாட குடும்ப தேவைக்குரிய காய்கறிகள் அனைத்தும் மாடித்தோட்டத்தின் வாயிலாகவே கிடைத்தது. மாடித்தோட்டம் மூலம் இவ்வாறாக நமக்கு தேவைப்படும் காய்கறிகளை சுயமாகவே இயற்கை முறையில் விளைவிப்பது குறித்து அருகாமையில் உள்ளவர்கள் எங்களது மாடித்தோட்டத்தினை வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.

ஆரோக்கியமான, சத்தான காய்கறிகளை நாங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளும் மனதிருப்தியுடன் உள்ளோம். இதுபோன்று அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எங்களைப்போன்றோரின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு ராஜா தெரிவித்தார்.

‘விளைவித்த காய்கறிகளை உண்ணும்போது பேரானந்தம்’
முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம்“ திட்டத்தின் கீழ் பயனடைந்துவரும் சேலம், அம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த இல்லத்தரசி கீதா(42) தெரிவித்ததாவது.


தினசரி எனது அன்றாட காய்கறி தேவைக்காக கடைகளுக்கு சென்று காய்கறிகள் வாங்கி வருவது வழக்கம். அவ்வாறு செல்லும்போது இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளை காண்பது அரிதாக உள்ளது. பல்வேறு நேரங்களில் இயற்கை முறையில் எனது வீட்டிலேயே காய்கறிகளை உற்பத்தி செய்து கொள்ள வேண்டும் என எண்ணியதுண்டு.
இவ்வாறான சூழ்நிலையில் முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித்தோட்டம் என்ற திட்டத்தினை அறிமுகம் செய்து என்னைப்போன்ற இல்லத்தரசிகளின் எண்ணங்களுக்கு உயிரோட்டம் தந்துள்ளது குறித்து கேள்விப்பட்டேன். இரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளால் நாம் மட்டும் அல்லாமல் நமது சந்ததியினரும் பாதிக்கப்படாமல் பாதுகாத்திடும் வகையில் இத்திட்டம் ஒரு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது.
வீட்டுத்தோட்டத்தில் இயற்கை முறையில் விளைவித்த காய்கறிகளை உண்ணும்போது நம்மை அறியாமலேயே ஒருவித ஆனந்தம் ஏற்படுகிறது.
எனது மாடித்தோட்டத்திற்கு காலை மற்றும் மாலை சென்று வரும்போது அன்றாட வாழ்க்கையில் ஏற்படக்கூடிய மனஅழுத்தங்களை மறந்து ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகிறது. நகர்ப்புறங்களில் வசிக்கும் என்னைப்போன்ற இல்லத்தரசிகளுக்கு இத்திட்டம் மிகுந்த பயனளிக்கக்கூடிய திட்டமாக அமைந்துள்ளது.
இத்திட்டத்தினை எங்களுக்கு வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலி னுக்கு இல்லத்தரசிகள் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கீதா தெரிவித்தார்.


முதல்வராக மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றது முதல் தமிழக மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு பல்வேறு சிறப்பான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

பொதுமக்களின் தேவையினை உள்ளபடியே உணர்ந்து திட்டங்களை அறிவிப்பதோடு மட்டுமல்லாமல் அத்தகைய திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்று சேர்வதை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கைகள் மேற்கொள்வதால் நிறைவேற்றப்படும் அனைத்து திட்டங்களும் வெற்றிகரமான மக்கள் நலத்திட்டங்களாக விளங்குகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

தொகுப்பு:
ச.சுவாமிநாதன்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
சேலம் மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img