வேலூர் நறுவீ மருத்துவமனை வளாகத்தில் சர்வதேச மகளிர் தின விழா பல்வேறு நிகழ்வுகளுடன் கொண்டாடப்பட்டது. மருத்துவ மனை மருத்துவ சேவைகள் தலைவர் டாக்டர் அரவிந்தன் நாயர் வரவேற் றார். நறுவீ மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் தலைமை வகித்து பேசுகையில், ஒரு குடும்பத்தை எடுத்துக்கொண்டால் தாய், மனைவி, சகோதரி, மகள், மருமகள், பேத்தி என்று பெண்கள் சம பங்கு எடுத்து வருகின்றனர். பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு சிறு வயது முதலே பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை சொல்லி வளர்த்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
‘சக்தி இல்லையேல் சிவம் இல்லை’ என்பதற்கு இணங்க அனைத்து துறைகளிலும் உயர் பதவி வகித்து வருகின்றனர். மருத்துவச் சேவையில் பெண்களின் பங்கு அதிகமாக உள்ளது. நறுவீ மருத்துவமனையில் பெண் பணியர்களின் எண்ணிக்கை அதிகம்.மகளிர் தின விழா என்பது ஒரு நாள் கொண்டாட்டமாக இல்லாமல், ஆண்டு முழுவதும் கொண்டாடலாம். அது பெண்களுக்கு நாம் அளிக்கும் கவுரவம் என்றார். சிறப்பு விருந்தினர் வேலூர் சி.எம்.சி. மருத்துவ கல்லூரி மருத்துவ மனை முன்னாள் இயக்குநர் டாக்டர் ஜாய்ஸ் பொன்னையா, விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது:
மருத்துவம் மற்றும் சுகாதார சேவையில் பெண்களின் பங்கு அதிகம். பெண்களின் சேவையை ஊக்குவிக்க வேண்டும். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது என்பது உன்னதமானதாக இருக்க வேண்டும். பெண்கள் தனியுரிமையுடன் மகிழ்ச்சியாக பணியாற்ற உதவியாக இருக்க வேண்டும். பெண்கள் அறிவு சக்தியாக விளங்க வேண்டும் அது அவர்களுக்கு தற்காப்பு ஆயுதமாக அமையும். சேவை பணியில் உள்ள பெண்கள் நேர்மை மற்றும் இரக்க குணம் உடையவர்களாக இருக்க வேண்டும் அது அவர்களை உயரத் திற்கு கொண்டு செல்லும் என்றார்.
மருத்துவமனை குழந்தைகள் நல தலைமை மருத்துவர் சோனியா மேரி குரியன், மகப்பேறு மருத்துவர் ரம்யா ஆகியோர் பெண்கள் அதிகாரம் மற்றும் சம உரிமை பற்றி பேசி னார்கள். மருத்துவமனை மகப்பேறு தலைமை மருத்துவர் அருணா கேக்ரே, பொது மேலாளர் நித்தின் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜேக்கப் ஜோஸ் நன்றி கூறினார்.