fbpx
Homeபிற செய்திகள்‘புதுமைப்‌ பெண்’ திட்டத்தில் இதுவரை கோவை மாவட்டத்தில் 3596 மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 உதவித்...

‘புதுமைப்‌ பெண்’ திட்டத்தில் இதுவரை கோவை மாவட்டத்தில் 3596 மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 உதவித் தொகை

கோவை மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று, உயர்கல்வி பயிலும் 3,596 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/- உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

மாநிலத்தின்‌ அனைத்து வளர்ச்சியிலும்‌ பெண்களுக்கு உரிய இடம் வழங்கும்‌ பொருட்டு, தமிழ்நாடு அரசு சமூக நலம்‌ மற்றும்‌ சத்துணவுத்‌ திட்டத் துறை என்ற பெயரை ‘சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்‌ துறை’ என மாற்றம்‌ செய்துள்ளது.
பெண்கள்‌, குழந்தைகள்‌, மூத்த குடிமக்கள்‌, திருநங்கையர்‌ போன்றவர்களின்‌ நலனை காத்திடும்‌ வகையில்‌ அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

உழைக்கும் சமூகம்
அந்த வகையில்‌, பெண் கல்வியை போற்றும்‌ விதமாகவும்‌, உயர் கல்வியை உறுதி செய்து இன்றைய பெண்‌ சமூகம்‌ நாளைய தமிழகத்தை தாங்கும்‌ அறிவியல்‌ வல்லுநர்களாகவும்‌, மருத்துவராகவும்‌, பொறியாளராகவும்‌, படைப்பியலாளராகவும்‌, உயர்கல்வி கற்ற பெண்களாகவும்‌, கல்வியறிவு, தொழில்நுட்பம்‌ நிறைந்த உழைக்கும்‌ சமூகத்தை சார்ந்தவராகவும்‌, உருவாக அடித்தளமாக ‘புதுமைப்‌ பெண்’ என்னும்‌ உன்னத திட்டத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/- உதவித் தொகை வழங்கும் ‘புதுமைப்‌ பெண்’ திட்டத்தினை 05.09.2022 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின்‌ மூலம்‌, பெண்களுக்கு உயர்‌ கல்வி அளித்து, பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல்‌, குழந்தை திருமணத்தைத்‌ தடுத்தல்‌, குடும்பச்‌ சூழ்நிலை மற்றும்‌ வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல்‌, பெண்‌ குழந்தைகளின்‌ இடைநிற்றல்‌ விகிதத்தை குறைத்தல்‌, பெண்‌ குழந்தைகளின்‌ விருப்பத்‌ தேர்வுகளின்படி அவர்களின்‌ மேற்படிப்பை தொடர ஊக்குவித்தல்‌, உயர்‌ கல்வியினால்‌ பெண்களின்‌ திறமையை ஊக்கப்படுத்தி அனைத்துத்‌ துறைகளிலும்‌ பங்கேற்கச்‌ செய்தல்‌, உயர்கல்வி உறுதித்‌ திட்டத்தின்‌ மூலம்‌ பெண்களுக்கான தொழில்‌ வாய்ப்புகளை அதிகரித்தல்‌, பெண்களின்‌ சமூக மற்றும்‌ பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல்‌ போன்றவற்றின்‌ மூலம்‌ அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்யப்படுகிறது.

மாணவிகள் 6 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து, தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும், தனியார் பள்ளியில் Right to Education கீழ் 6 முதல் 8 -ம் வகுப்பு வரை பயின்ற பின் 9 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவியர் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

இளநிலை கல்வி பெறும் அனைத்து மாணவியரும் (இளநிலை முதலாம் ஆண்டு சேரும் மாணவிகளுக்கு, தொழிற்கல்வி/மருத்துவக் கல்வி 2-ம் ஆண்டு முதல் 5-ம் ஆண்டு வரை பயிலும் மாணவிகளும்) இத்திட்டத்திற்காக புதியதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் லீttஜீ://ஜீமீஸீளீணீறீஸ்வீ.tஸீ.ரீஷீஸ்.வீஸீ வழியாக மாணவிகள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்.

இத்திட்டத்தில் பயன்பெறுவது குறித்து விவரங்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் -14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலை.யில் 5-09-2022 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 199 கல்லூரிகளை சேர்ந்த 3,596 மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையினை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வழங்கினார்.

மாதம் ரூ.1000/- உதவித்தொகை அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படுகிறது. கல்வி என்னும்‌ நிரந்தர சொத்தினை பெண்கள்‌ அனைவரும்‌ பெற்றிட வேண்டும்‌ என்ற பெண்ணுரிமை கொள்கையின்‌ மறுஉருவமாகவும்‌, பெண்‌ சமுதாயத்தின்‌ வாழ்வில்‌ ஒளியேற்றி வலிமையான பொருளாதாரத்தில்‌ தன்னிறைவு அடையவும்‌ இப் ‘புதுமைப்‌ பெண்’ திட்டம்‌ செயல்படுத்தப்படுகிறது.

“தடையின்றி தொடர்கிறேன்”
இத்திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000/- உதவித்தொகை பெற்று வரும் மாணவி சுவேதா தெரிவித்ததாவது: கோவை புலியகுளம் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலைத் தமிழ் இலக்கியம், மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறேன். பெற்றோர் கூலி வேலை செய்கின்றனர்.

உயர்கல்வி படிக்கவேண்டும், என்பதற்காக கஷ்டப்பட்டு என்னை படிக்க வைக்கிறார்கள். அரசுப் பள்ளியில்தான் படித்தேன், தற்போது உயர்கல்வியையும் அரசு கல்லூரியில் தான் படிக்கிறேன்.

என்னுடைய படிப்பிற்கான தேர்வுக் கட்டணம், புத்தகம் வாங்கும் செலவு, உள்ளிட்ட செலவுகளை சமாளிக்க முடியாமல் படிப்பை தொடர முடியுமா என்ற நிலையில் மிகவும் சிரமப்பட்டு வந்தோம். இந்நிலையில் முதல்வர் புதுமைப் பெண்கள் திட்டத்தை அறிவித்தார்.

இத்திட்டத்தை தொடங்கி வைத்த அன்றே என்னுடைய வங்கி கணக்கில் ரூ.1000/- செலுத்தப்பட்டதற்கான குறுஞ்செய்தி வந்தது. இத்திட்டத்தின் கீழ் தற்போது எனக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1000 உதவித்தொகை வருகிறது.

இதனால் என்னுடைய உயர்கல்வி படிப்பை தடையின்றி தொடரமுடிகிறது. என்னுடைய உயர்கல்வி படிப்பை தொடர ஊக்குவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

“கல்லூரி படிப்புக்கு உதவும்”
மு.சுபத்ரா தெரிவித்ததாவது:
புலியகுளம் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலைத் தமிழ் இலக்கியம், மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். திருமணம் ஆகிவிட்டது. திருமணத்திற்கு பிறகும் உயர்கல்வியை நிறுத்தாமல் தொடரவேண்டும் என்று ஆசைப்பட்டேன். கணவர் சுவர் பூச்சு வேலை செய்கிறார்.

அவருடைய மிகக் குறைவான வருமானத்தில்தான் எங்களுடைய குடும்ப செலவுகளுடன், படிப்பிற்கான செலவுகளையும் சமாளித்து வந்தோம். இந்நிலையில் முதல்வர் புதுமைப் பெண் திட்டத்தை அறிவித்தார்.

இத்திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, அன்றே என்னுடைய வங்கி கணக்கில் ரூ.1000 வந்துள்ளதாக குறுஞ்செய்தி வந்தது. இத்திட்டத்தின் கீழ் தற்போது எனக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1000 உதவித்தொகை வருகிறது.

கல்லூரி படிப்பை முடிக்க இத்தொகை பேரூதவியாக இருக்கும். இத்திட்டத்தினை தந்த முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தொகுப்பு:
ஆ.செந்தில் அண்ணா,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
கி. மோகன்ராஜ்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி),
கோயம்புத்தூர் மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img