கிருஷ்ணகிரியில், அகில இந்திய பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் நலச் சங்கத்தின் 6வது மாவட்ட மாநாடு நேற்று நடந்தது. மாவட்டத் தலைவர் முனியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுப்ரமணியம் வரவேற்றார்.
மாவட்ட துணை செயலாளர் கோவிந்தன் அஞ்சலி உரையாற்றினார். மாநில துணை செயலாளர் பட்டாபிராமன் மாநாட்டு துவக்கவுரை ஆற்றினார். மாநில துணைச் செயலாளர் ரமணி, மாநில செயலாளர் வெங்கடாசலம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மாவட்ட பொருளாளர் வணங்காமுடி நன்றி கூறினார்.
கூட்டத்தில், 7வது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர்களுக்கு கடந்த 2017 ஜன., 1 முதல் ஓய்வூதியம் மாற்றம் செய்ய வேண்டும்.
கடந்த 5 ஆண்டுகளாக பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் நிதிநிலை காரணமாக, பி.எஸ்.என்.எல்., எம்.ஆர்.எஸ்., கார்டை பயன்படுத்தி மருத்துவம் பார்ப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனவே ஓய்வூதியர்களின் நலன் கருதி தேவையான நிதியை உடனே ஒதுக்க வேண்டும்.
கடந்த 2020 அக்., 1 முதல் 2021 ஜூன் 30 வரை நிறுத்தி வைக்கப்பட்ட 9 மாத அகவிலைப்படி நிலுவையை உடனே வழங்க வேண்டும். மூத்த குடிமக்கள் அனைவருக்கும் அரசு பஸ்களில் குறைந்தபட்சம் 50 சதவீத பயண கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும்.
பி.எஸ்.என்.எல்., புத்தா க்கத்திற்கு 31.65 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசின் முடிவை வரவேற்கிறோம். அதே சமயம் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் 5ஜி சேவைக்காக போட்டியிடும் நிலையில், பி.எஸ்.என்.எல்., நிறுவனம் 4ஜி சேவையையே வழங்க இயலாத சூழல் நீக்கப்பட்டு 4ஜி மற்றும் 5ஜி சேவையை பி.எஸ்.என்.எல்., வழங்க வேண்டும்.
ஓய்வூதியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட அளவில் நடத்த வேண்டும். மூத்த குடிமக்களுக்கு ரயில் பயணங்களில் இருந்த சலுகைகளை அரசு திரும்ப பெற்றுள்ளது.
அதனை மீண்டும் பரிசீலனை செய்து சலுகைகளை திரும்ப வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



