fbpx
Homeபிற செய்திகள்பாலின சமத்துவத்தை வலியுறுத்தி திருப்பூரில் வாகன வீடியோ பிரச்சாரம்

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி திருப்பூரில் வாகன வீடியோ பிரச்சாரம்

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி வாகனத்தில் வீடியோ பிரச்சாரம் திருப்பூரில் நடந்தது. பாலின சமத்துவ வேறுபாடு காரணமாக பணியிடங்களிலும், குடும்பங்களிலும் வன்முறை நிகழ்ந்து வருகிறது.

அதே போல, பெண் கல்வி, பணியிடங்களில் பெண்களுக்கு பதவி உயர்வு போன்றவை பாலின வேறுபாடு காரணமாக பாதிப்புக்குள்ளாகின்றது. இந்த ஏற்றத் தாழ்வுகளை களைய வேண்டும் என்ற நோக்கில், திருப்பூரில் 60 வார்டுகளிலும் வீடியோ படம் வெண் திரையில் காணும் வகையில், திருப்பூர் சேவ் அமைப்பு 15 நாட்களுக்கு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.

முதல் நாளாக வாகன பிரச்சார ஊர்தியை தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவி ஏ.எஸ்.குமாரி துவக்கி வைத்து பேசும்போது, பொதுவாக பெண்கள் பல்வேறு நிலைகளில் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே, பாலின சமத்துவத்தை அடைவதற்கு பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பாதிப்புக்குள்ளாகும் பெண்கள் உள்ளூர் குழு, 181 எண்ணை தொடர்பு கொண்டு தங்களின் பாதிப்புகளை தெரிவித்தால் உடனடியாக தீர்வு காணலாம் என்று குறிப்பிட்டார்.

பாலின சமத்துவத்திற்காக சேவ் அமைப்பு தயாரித்த பயிற்சி கையேடை, மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.வினீத் வெளியிட்டு பேசுகையில், சேவ் போன்ற தன்னார்வ அமைப்புகளின் முயற்சி பாராட்டுக்குரியது.

கிராம, நகர்ப்புற பகுதிகளில் பெண்களின் பாதுகாப்பு அம்சங்களுக்காக அரசு முன்வைத்திருக்கின்ற செயல் நடவடிக்கைகளை பொதுமக்கள் அறிந்தவர்களாய் இருக்க வேண்டும். அதற்கு இந்த வாகனப் பிரச்சாரம் பெரும் துணையாக இருக்கும் என்றார்.

சேவ் அமைப்பின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆ.அலோசியஸ் பேசுகையில், சிறுமிகள், உயர்கல்வியை தொடர்வதற்கு பாலின சமத்துவ வேறுபாடு காரணமாக மேற்படிப்பை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது. உயர் தொழில் நிறுவனங்களில் பணி உயர்வு பெறுவதிலும், அதே போல் வெளியூர்களுக்கு சென்று வேலை செய்வதிலும் அச்சம் காரணமாக தடை ஏற்படுகிறது.

இதை களைவதற்கு அனைத்து தரப்பட்ட அமைப்புகளும், பெண்களை உள்ளடக்கிய செயல் திட்டங்களை முன் வைக்க வேண்டும்.

பாலியல் துன்புறுத்தல் குறித்த புகார்களை விசாரிக்க உள்ளூர் குழு அமைத்து, அந்த புகார்களை பெறுவதற்கு ஏற்ற வகையில் கிராம பஞ்சாயத்து, நகர்ப்புற வார்டுகளில் நோடல் அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றார்.

மாவட்ட சமூக நல அதிகாரி ஆர்.அம்பிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img