நீலகிரி மாவட்டத்தில், 404 நியாயவிலைக் கடைகள் மூலம், அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மொத்தம் 2,08,940 பேருக்கு (ஜன.19 வரை) 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு துறைகளின் சார்பாக பல திட்டங்களை அறிவித்து மிக சிறப்பாக செயல்படுத்தி மக்கள் பாராட்டும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் பொதுமக்களின் பொருளாதாரம் பாதிப்பு அடைந்துள்ளதை எண்ணி நியாயவிலைக் கடைகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்தினை அறிவித்து, அதை அனைத்து மாவட்டத்திலும் செயல்படுத்திட உத்தரவிட்டார். முதல்வராக பொறுப்பேற்றபோது, ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு அதனையும் உடனடியாக செயல்படுத்திட உத்தரவிட்டார்.
2022-ம் ஆண்டு தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி 1 கிலோ, வெல்லம் 1 கிலோ, முந்திரி 50 கிராம், திராட்சை 50 கிராம், ஏலக்காய் 10 கிராம், பாசிப்பருப்பு 500 கிராம், நெய் 100 கிராம், மஞ்சள்தூள் 100 கிராம், மிளகாய் தூள் 100 கிராம், மல்லித்தூள் 100 கிராம், கடுகு 100 கிராம், சீரகம் 100 கிராம், மிளகு 50 கிராம், புளி 200 கிராம், கடலைப்பருப்பு 250 கிராம், உளுத்தம்பருப்பு 500 கிராம், ரவை 1கிலோ, கோதுமைமாவு 1 கிலோ, உப்பு 500 கிராம், முழு நீள கரும்பு 1 துணிப்பை 1 என மொத்தம் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி, அனைத்து மாவட்டத்திலும் வழங்கிட உத்தரவிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
404 நியாயவிலைக்கடைகள்
நீலகிரி மாவட்டத்தில், உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, பந்தலூர் குந்தா ஆகிய ஆறு வட்டங்களில் இயங்கி வருகிற 404 நியாய விலைக் கடைகளில், 2,20,497 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்புகள் 19.01.2022 அன்று வரை குன்னூர் வட்டத்தில் 43,786 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், கூடலூர் வட்டத்தில் 38,879 குடும்ப அட்டைதாரர்களுக்கும், கோத்தகிரி வட்டத்தில் 28,422 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், உதகை வட்டத்தில் 53,374 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், குந்தா வட்டத்தில் 14,873 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், பந்தலூர் வட்டத்தில் 29,606 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் என மொத்தம் 2,08,940 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை பொங்கல் பரிசு தொகுப்பு வாங்காத, அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் பணிகள் 31.01.2022 வரை தொடர்ந்து நடைபெறும்.‘சிறப்பாக அமைந்தது
பொங்கல் திருநாள்’
பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற்ற பயனாளி அனிதா கூறியதாவது:
என் கணவர் பெயர் பிரகாஷ். குன்னூர் பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
பொங்கல் பண்டிகையினை சிறப்பாக கொண்டாடும் விதமாக எங்களுக்கு இந்த வருடம் 21 வகை பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
21 பொருட்களும் தரமாகவும், மிகவும் உபயோகமுள்ளதாகவும் உள்ளது. பொங்கல் பண்டிகையை சிறப்பான முறையில் கொண்டாட உதவிய முதலமைச்சருக்கு நான் கோடானு கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
தமிழர்களின் திருநாளாம் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கி அவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி தந்த முதலமைச்சருக்கு, நீலகிரி மாவட்ட மக்கள் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
‘பணத்தைவிட பொருள்
தந்ததால் மகிழ்ச்சி’
பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற்ற பயனாளி வைதீஸ்வரன் கூறியதாவது:
குன்னூர் டி.டி.கே. பிள்ளை சாலை பகுதியில் வசித்து வருகிறேன். 60 வயதாகிறது. கூலி வேலை செய்து வருகிறேன். கொரோனா நோய் தொற்று காலமாக உள்ள காரணத்தினால் தொடர்ந்து வேலையின்றி கஷ்டப்பட்டு வந்தேன். எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இருவரும் திருமணம் ஆகி சென்று விட்டனர். இந்த வருடம் முதல்வர் தெரிவித்தபடி, பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடுவதற்காக, எனக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு கிடைத்தது.
இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பில் 21 பொருட்களும் தரமாகவும், திருப்திகரமாகவும் உள்ளது. பணம் கொடுப்பதை காட்டிலும் பொருட்கள் கொடுத்தது மிகவும் உபயோகமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. இதுபோன்ற பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
தொகுப்பு
நி.சையத் முகம்மத்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்.
ஓ.ர.மனோஜ்குமார்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி)
நீலகிரி மாவட்டம்.



