தமிழக பாஜக. தலைவ ராக அண்ணாமலை 16-ம் தேதி பதவி ஏற்கிறார். அதற்காக, இன்று கோவையில் இருந்து, சாலை வழியாக சென்னைக்கு புறப்பட்டார்.
கோவை வழியாக சென்னை வரும் அண்ணாமலைக்கு வரவேற்பளிக்க தமிழ்நாடு பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர். அதன்படி கோவையில் அவருக்கு மாலை அணிவித்து வரவேற்றனர்.
இந்நிலையில், இன்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ‘’பாஜக கட்சியைப் பொறுத்தவரை மாநிலத் தலைவர் என்ற பொறுப்பு அனைவரையும் இணைத்து அழைத்துச் செல்லும் ஒரு பொறுப்பாகத்தான் பார்க்கிறேன்.
இதில் வயது என்பது முக்கியமான விஷயம் கிடையாது. இது ஒரு கூட்டு முயற்சி. ஒருபக்கம் இல. கணேசன் போன்ற அனுபவம் வாய்ந்தவர்கள் இருக்கின்றார்கள், மற்றொரு புறம் ஓசூர் பகுதியைச் சேர்ந்த கட்சிக்காக உழைத்து, பலபேரால் தாக்கப்பட்ட நரேந்திரன் போன்றவர்களும் இருக்கிறார்கள்.
எனவே இது தனிமனித கட்சி கிடையாது. தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக பாஜக வரும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, ‘காவிரி, மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு பாஜக முழு ஒத்துழைப்பு தரும்.காவிரி, மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு தரப்படும். கொங்குநாடு தொடர்பாக நாளை மறுநாள் விளக்கம் தருகிறேன்,’என்றார்.