Homeதலையங்கம்தமிழகத்தின் தலைமை சிற்பி மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தின் தலைமை சிற்பி மு.க.ஸ்டாலின்!

அரசுப் பள்ளிகளில் பல அதிரடியான திட்டங்களை அடுத்தடுத்து அறிவித்து வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தற்போது அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் ஒழுக்கத்தைச் சீராக்கும் ‘சிற்பி’ திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு மொபைல்கள் வந்தபிறகு சமீப காலமாகப் பிள்ளைகளின் மனநிலை வன்முறை சார்ந்து ஈர்க்கப்படுவது அதிகரித்துள்ளது. நேரடியாக வன்முறைக் காட்சிகளைக் காணும் பிள்ளைகள் மனரீதியாக வன்முறைக்கு எளிதாகப் பழகிவிடுகிறார்கள்.

அதைத் தடுக்கத்தான் சிற்பி’ திட்டம். ‘சிற்பி’ என்றாலும் அது குறிக்கும் ஆங்கில விரிவாக்கம் வேறு. அதாவது Students in Responsible Police Initiatives என்பதன் சுருக்கம்தான் Sirpi.

இதன் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “வளரும் பருவத்திலேயே சிறார்களை நல்வழிப்படுத்துவது மூலம் ஒரு நல்ல தலைமுறையை உருவாக்க முடியும்.

குற்றங்களைத் தடுப்பது என்ற நிலையிலிருந்து, குற்றங்களே நிகழாச் சூழலை உருவாக்குவது என்ற நிலையை நோக்கி நகர முடியும். அத்தகைய தலைமுறையைச் செதுக்கும் பொறுப்புணர்வு மிக்க திட்டம்தான் சிற்பி” என்று விளக்கம் அளித்தார்.

இந்தச் ‘சிற்பி’ திட்டத்தில் மாணவர்களை காவல்துறையினரின் முயற்சிகளில் ஈடுபடுத்தும் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மதிப்பு ரூபாய் 4.25 கோடி. சென்னையில் மட்டும் 100 பள்ளிகளை இதற்காகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

அதாவது ஒரு பள்ளியிலிருந்து எட்டாம் வகுப்பு படிக்கும் 50 மாணவர்களை இதில் ஈடுபடுத்த உள்ளனர். அவர்களை 8 சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்துச் சென்று பொது அறிவு, வரலாற்று உணர்வு போன்றவற்றை ஏற்படுத்துவதுடன் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுப் பயிற்சிகளை அளிக்க உள்ளனர்.

இதனால் ஏறக்குறைய 2764 மாணவர்களும் 2236 மாணவிகளுமாகச் சேர்த்து 5 ஆயிரம் பேர் பயனடைய உள்ளனர். இளம் வயதிலேயே தவறான பழக்கங்களில் பள்ளிக் குழந்தைகள் ஈடுபடுவதைத் தடுக்க அரசு இதன் மூலம் திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தில் செயல்படும் மாணவ, மாணவிகளுக்குத் தனியே சீருடையும் வழங்கப்படுகிறது. ஆழ்ந்த யோசனைக்குப் பின் செயல்பாட்டுக்கு வந்துள்ள இத்திட்டம், மகத்தானது; சமூக அக்கறையுடன் உருவானது. கல்லில் உளியால் செதுக்கிச் செதுக்கி சிலையாக உருமாற்றம் தருகிறான், சிற்பி.

அதனை வணங்குகிறோம், போற்றுகிறோம். அதைப் போலத்தான் மாணவ, மாணவிகளை சிறு வயதில் இருந்தே ஒழுக்க சீலர்களாகவும் சமூக அக்கறை கொண்டவர்களாகவும் மாற்றப்போவதுசிற்பி` திட்டம் என்றால் மிகையாகாது.
இத்திட்டம் வெற்றி பெற மாணவ, மாணவிகள் உறுதிப்பாட்டுடன் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

அவர்களோடு ஆசிரியர்களும் பெற்றோரும் இணைந்து செயலாற்ற வேண்டியது அவசியம். மாணவ, மாணவிகள் ஒவ்வொருவரும் அனைவராலும் போற்றப்படத் தக்க உன்னத நிலையை எட்ட வேண்டும்

அது தான் சிற்பி திட்டத்தின் வெற்றியை உறுதி செய்யும். அது தான் தமிழகத்தின் தலைமைச் சிற்பியாகப் பரிணாமம் பெற்றுத் திகழும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு செலுத்தும் நன்றியாகும்!

படிக்க வேண்டும்

spot_img