கோவை மாவட்டத்தில் 6 லட்சம் பேர் 2 ம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் ஜனவரி 16 ஆம் தேதியில் இருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து அனைத்து தரப்பினருக்கும் எளிதில் தடுப்பூசி சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த செப்டம்பர் 12ம் தேதியில் இருந்து வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் 27 லட்சத்து 90 ஆயிரத்து 700 பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்கள். இவர்களில் 27 லட்சத்து 69 ஆயிரத்து 673 பேர் முதல் தவணையும், 14 லட்சத்து 94 ஆயிரத்து 60 பேர் இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக மத்திய அரசின் கோவின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் தவணை கொரோனா தடுப்பூசியை 99 சதவீதம் பேர் செலுத்திக்கொண்டுள்ள நிலையில், 2ம் தவணை தடுப்பூசியை 53 சதவீதம் பேர் மட்டுமே செலுத்திக் கொண்டுள்ளனர். இதற்கு கொரோனா தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாம் தவணைகளுக்கிடையே 3 மாத இடைவெளி இருப்பது முக்கிய காரணமாக இருக்கிறது.
2 ஆம் தவணைக்கான நாட்கள் கடந்தும் கிட்டத்தட்ட 6 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநர் பி.அருணா கூறியதாவது: கோவை மாவட்டத்தில் நேற்று வரை 6 லட்சம் பேர் 2 ம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் உள்ளனர்.
கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதால் பலர் 2 ம் தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாமல் உள்ளனர்.
2 ஆம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டுமே கொரோனா நோய்த் தொற்றில் இருந்து முழுமையான பாதுகாப்பு கிடைக்கும்.
எனவே, கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 84 நாள்களிலும், கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 40 நாள்களுக்குள்ளும் 2 ம் தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும்.
அனைவருக்கும் எளிதில் தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
எனவே 2 ம் தவணை தடுப்பூசிக்கு காத்திருப்பவர்கள் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



