Homeபிற செய்திகள்கொரோனா தொற்றால் தவித்த குடும்பத்தினருக்காக ஈரோட்டில் சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

கொரோனா தொற்றால் தவித்த குடும்பத்தினருக்காக ஈரோட்டில் சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

கொரோனா பெருந்தொற்றில் வருவாய் ஈட்டும் குடும்ப நபர்களை இழந்தவர்களின் வாழ்வாதாரத்துக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் வேலைவாய்ப்பு பெற்ற ஈரோடு மாவட்ட மக்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில், சமூக பாதுகாப்புத் துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் கொரோனா நோய்த் தொற்று காரணமாக தாய் தந்தை இருவரையும் இழந்த அல்லது ஒற்றை பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு முதல்வரின் நிவாரண நிதி வழங்கும் திட்டத்தின் கீழ் இரு பெற்றோரையும் இழந்த 13 குழந்தைகளும், ஒற்றை பெற்றோரை இழந்த 450 குழந்தைகளும் கண்டறியப்பட்டு, இவர்களின் விண்ணப்பங்கள் மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

ரூ.9.90 கோடி நிவாரண நிதி
இதில், ஒற்றை பெற்றோரை இழந்த 310 குழந்தைகளுக்கு ரூ.9,30,00,000 பொது நிவாரண நிதியும், இரு பெற்றோரையும் இழந்த 12 குழந்தைகளுக்கு ரூ.60,00,000 பொது நிவாரண நிதியும் என மொத்தம் 322 குழந்தைகளுக்கு ரூ.9.90 கோடி மதிப்பீட்டிலான பொது நிவாரண நிதியை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 9.6.2022 அன்று சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்திய, கொரோனா பெருந்தொற்றில் வருவாய் ஈட்டும் குடும்ப நபர்களை இழந்தவர்களின் வாழ்வாதாரத்துக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி துவக்கி வைத்தார்.

இக்குழந்தைகளின் மறுவாழ்விற்காக குழந்தைகளின் பெற்றோர்களுக்கு அவரவர் கல்வித்தகுதிக்கு ஏற்றார்போல் வேலைவாய்ப்பினையும், சிறு தொழில் தொடங்குபவர்களுக்கு சிறு தொழில் கடன் மற்றும் இலவச சட்டம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காண மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டது.

இச்சிறப்பு முகாமில் 17 தொழில்துறை நிறுவனங்களும், கொரோனா பெருந்தொற்றில் வருவாய் ஈட்டும் குடும்ப நபர்களை இழந்த 182 நபர்களும் பங்கேற்றனர்.

முகாமில் 7 நபர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 8 நபர்கள் தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தில் தையல் பயிற்சிக்கும், 14 நபர்கள் முதல்நிலை நேர்முக தேர்வில் வெற்றி பெற்று, 2-ம் நிலை நேர்முக தேர்வுக்கும், 20 நபர்கள் இலவச சட்ட ஆலோசனைக்கும், ஒருவர் சிறு தொழில் அமைக்க வங்கி கடனுதவிக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இதில் வேலைவாய்ப்பிற்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அன்றைய தினமே பணி நியமன ஆணை வழங்கினார்.

“கலங்கி நின்றேன் பெற்றேன் ஆதரவுக் கரம்”
ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் பகுதியில் வசிக்கும் அபிராமி தெரிவித்ததாவது: எனது கணவர் (வயது 33) நகை வேலை செய்து வந்தார். கணவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த ஆண்டு இறந்துவிட்டார். 4 வயதில் மகள் உள்ளார். தற்போது, எனது தாய், தந்தையுடன் வசித்து வருகிறேன்.

திருமணமான குறைந்த வருடங்களிலேயே கணவரை இழந்தது எங்களை மீளாத் துயரில் ஆழ்த்தியது. கையில் பெண் குழந்தையை வைத்துக் கொண்டு, எங்களது எதிர்காலம் என்னவாகும் என்று கலங்கி நின்ற வேளையில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பற்றி தகவல் கிடைத்தது.

கடந்த 9.6.2022 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கொரோனா பெருந்தொற்றில் வருவாய் ஈட்டும் குடும்ப நபர்களை இழந்தவர்களின் வாழ்வாதாரத்திற்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் நான் பங்கேற்றேன். முகாமில் தனியார் துறையில் வேலைவாய்ப்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.

முதற்கட்ட நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்று, தற்போது இரண்டாம் கட்ட நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்துள்ளது. விரைவில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியரின் முயற்சியால், எனக்கு இந்த வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வேலைவாய்ப்பானது, மகளின் எதிர்காலத்திற்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். கணவரை இழந்து வாழ்வாதாரத்திற்கு வழியின்றி தவித்து வந்த எனக்கு இதுபோன்ற வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த முதல்வருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் எனது பெரு மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

“கிடைத்தது வேலை பெற்றேன் வாழ்வாதாரம்”
ஈரோடு மாவட்டம், பெருந்துறை, ஆசிரியர் காலனி பகுதியில் வசிக்கும் வினிதா தெரிவித்ததாவது: எனது கணவர் (வயது 44) ஈரோடு மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கணவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்துவிட்டார். எனக்கு மகளும் (வயது 13), மகனும் (வயது 5) உள்ளனர்.

கணவர் இறந்துவிட்டதால், அடுத்து என்ன செய்வது, குழந்தைகளை எப்படி படிக்க வைப்பது என்று புரியாமல் இருந்தேன். தற்போது தாய், தந்தையுடன் வசித்து வருகிறோம்.

நான் டிப்ளமோ இன் ஆபிஸ் மேனேஜ்மென்ட் பயின்றுள்ளேன். எனது அக்காவின் கணவர் மூலமாக கொரோனா பெருந்தொற்றில் வருவாய் ஈட்டும் குடும்ப நபர்களை இழந்தவர்களின் வாழ்வாதாரத்துக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதை அறிந்தேன். கடந்த 9.6.2022 அன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இம்முகாமில் எனது விபரத்தை பதிவு செய்தேன்.

இம்முகாமில் வேலைவாய்ப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டு, பணி நியமன ஆணையை அன்றைய தினமே மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இதன் மூலம் குழந்தைகளை பிறரின் உதவியின்றி நானே படிக்க வைக்க இயலும். எங்களின் எதிர்காலத்திற்கு இந்த வேலைவாய்ப்பானது மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது. என்னைப் போன்று கணவரை இழந்து, எந்தவொரு வாழ்வாதார மின்றி இருப்பவர்களுக்கு, இவ்வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்த முதல்வர், மாவட்ட ஆட்சியருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தொகுப்பு:
க.செந்தில்குமார்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
ஈரோடு மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img