கோவையில் கொரோனா நோய்த் தொற்றுக்கு வசூலித்த கூடுதல் கட்டணம் ரூ.4.47 லட்சம் நோயாளியிடம் திருப்பி அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு கட்டணத்தை மட்டுமே வசூலிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது பொது மக்கள் புகார் அளிக்கும் விதமாக கட்டுபாட்டு மையங்கள் ஏற்படுத்தப் பட்டு கட்டணமில்லா தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், கூடுதல் கட்டணம் வசூலித்தது தொடர்பாக சுகாதாரத் துறையினர் ஆய்வு மேற் கொண்டு வருகின்றனர். இதில் கூடுதல் கட்டணம் பெற்றிருந்தது தெரியவந்தால் வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணத்தை நோயாளிக்கு திரும்ப வழங்க தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டு வருகிறது.
அதன்படி கோவையில் இதுவரை 19 பேருக்கு கூடுதல் கட்டணம் திரும்பப் பெற்று தரப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியைச் சேர்ந்த ஜபருல்லா உக்கடம் புறவழிச் சாலையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அண்மையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுள்ளார்.
இவருக்கு அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப் பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆட்சியரிடம் அவர் புகார் அளித்துள்ளார்.
ஆட்சியரின் அறிவுறுத்தல் படி கூடுதலாக வசூலிக்கப்பட்ட ரூ.4 லட்சத்து 47 ஆயிரத்து 990 நோயாளியிடம் திரும்ப அளிக்கப்பட்டுள்ளது.



