கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டாரத்தில் இதுவரை, ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில், 2803 பேருக்கு வீட்டுக்கே சென்று சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன.
147 பேருக்கு பிசியோதெரபி சிகிச்சைகளும், கேன்சர், தோல் வியாதி, மிகவும் முதியவர் என 146 பேருக்கு ஆதரவு சிகிச்சையும் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து, மக்களின் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.
ஸ்டாலின் ஏழு உறுதிமொழிகள் என்ற 10 ஆண்டு தொலைநோக்குத் திட்டத்தில், ‘அனைவருக்கும் நல் வாழ்வு’ என்பது ஒரு முக்கிய உறுதிமொழியாகும்.
அதனை நிறைவேற்றும் வகையில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தை கடந்த 5-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் சாமணப்பள்ளி என்ற மலைக் கிராமத்தில் முதல்வர் தொடங்கி வைத்தார்.
முன்னோடித் திட்டமான ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தில் இரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரக பிரச்சினை, பிசியோதெரபி சிகிச்சை, புற்றுநோய் பாதிப்பு உள்ளிட்ட தொடர் மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவர்கள், மருத்துவமனைகளுக்கு தேடி வரக் கூடிய நிலையை மாற்றி, மருத்துவப் பணியாளர்கள் மக்களைத் தேடிச் சென்று, அவர்களுக்கு பரிசோதனைகளைச் செய்து மருந்து, மாத்திரைகள் உள்ளிட்ட மருத்துவ சேவை வழங்குவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இத்திட்டத்தில் பொது சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ தன்னார்வலர்கள் பங்கேற்று, மருத்துவ சேவை ஆற்ற உள்ளார்கள். முதல் கட்டமாக சில அவசிய மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன.
பரீட்சார்த்த அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தில் முதல் கட்டமாக 1264 பெண் சுகாதார தன்னார்வலர்களும், 50 பிசியோதெரபி மருத்துவர்களும், 50 செவிலியர்களும் இல்லம் தேடி வரும் இந்த சேவையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பரீட்சார்த்தமாக தமிழகத்தில் சில பகுதியில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டமானது இந்த ஆண்டு இறுதிக்குள் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்துக்காக 242 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 35 லட்சம் குடும்பங்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற உள்ளன.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டாரத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் கடந்த 5-ம் தேதி தொடங்கியது.
இத் திட்டத்தில் வீடுகளுக்குச் சென்று மாத்திரைகள் வழங்கும் களப்பணிகளை, மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் ஏ. செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.
அரவக்குறிச்சி வட்டாரத்தில் இதுவரை 1466 ரத்தக் கொதிப்பு பாதிப்பு உள்ளவர்களுக்கும், 857 நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கும், இரண்டு பாதிப்பும் உடையோர் 480 பேருக்கும் என மொத்தம் 2803 பேருக்கு, அவர்களின் வீடுகளுக்குச் சென்று பரிசோதனை செய்து, 2 மாத காலத்திற்கான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன.
147 பேருக்கு பிசியோதெரபி சிகிச்சைகளும், கேன்சர், தோல் வியாதி, மிகவும் முதியவர் என 146 பேருக்கு ஆதரவு சிகிச்சையும் வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் புதிதாக ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களை கண்டறியும் பணியும் நடைபெற்று வருகிறது.
‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டாரத்தில் பயன்பெற்ற பொதுமக்கள் தெரிவித்ததாவது:
‘மாத்திரை வாங்கப் போனா
வேலைக்கு போக முடியாது’
எனது பெயர் நல்லான். 75 வயசாச்சு. சீத்தப்பட்டி பக்கத்துல இருக்கிற பழைய காலனியில் குடியிருக்கேன். எனது இரண்டு பிள்ளைகள், திருமணமாகி தனியாக உள்ளனர். 7 ஆண்டுகளாக பிரஷர் உள்ளது. 100 நாள் வேலைக்கு சில நேரங்களில் செல்வேன்.
மலைக்கோவிலூர் ஊரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்குப் போய் பிரஷர் மாத்திரை வாங்குவேன்.
மாத்திரை வாங்கப் போற அன்னிக்கி என்னாலே வேலைக்குப் போக முடியாது.
நாலு நாளைக்கு முன்னாடி நர்ஸ் அம்மா வந்தாங்க.
பிரஷர் செக் பண்ணிட்டு இரண்டு மாசத்துக்கு மாத்திரை கொடுத்தாங்க. இனிமே நீங்க ஆஸ்பத்திரிக்கு வரத் தேவையில்லை.
முதல்வர் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் கொண்டு வந்திருக்காங்க. அதனாலே நாங்களே வந்து உங்களுக்கு செக் பண்ணி மாத்திரை கொடுத்திடுவோம். நேர நேரத்துக்கு கரெக்டா மாத்திரை சாப்பிடுங்கன்னு சொன்னாங்க.
ஏழை, எளிய மக்கள் சிரமப்படக்கூடாதுன்னு, அவங்களுக்கு உதவ நிறைய திட்டங்களைக் கொண்டு வந்த முதல்வருக்கு கோடான கோடி நன்றிங்க என்றார்.
‘ரெண்டு மாசமா போக முடியல’
எனது பெயர் குஞ்சரம். 45 வயசாச்சு. சித்தர்பட்டி காலனியில் வசிக்கிறேன். சுமார் பத்து வருஷமா சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருகிறேன். என்னாலே வேகமாக நடக்க முடியாது.
என் வீட்டுக்காரர் சுப்பிரமணி, நாலு மாசத்துக்கு முன்னே சிறிய ஆக்சிடென்ட்டில் நடக்க முடியாம இருக்கார். நான் மலைக்கோவிலூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று மாத்திரை வாங்கி வருவேன். ரெண்டு மாசமா போக முடியலே.
ரெண்டு நாளைக்கு முன்னாடி நர்ஸ் வீட்டுக்கு வந்தாங்க. ரத்த டெஸ்ட் எடுத்தாங்க. எல்லாம் பார்த்துட்டு இரண்டு மாசத்துக்கு மாத்திரை கொடுத்தாங்க. என்ன விசயம்னு கேட்டேன்.
என்னை மாதிரி உள்ள சர்க்கரை நோயாளிக்கு வீட்டுக்கு சென்று மாத்திரை கொடுக்கனும்னு சொல்லி திட்டம் கொண்டு வந்திருக்காங்க என்றார்.
100 நாள் வேலைக்குக் கூட போக முடியாம சிரமப்பட்ட எனக்கு வீடு தேடி வந்து டெஸ்ட் பண்ணி மாத்திரை குடுத்துட்டுப் போற இந்த திட்டத்தை செயல்படுத்துற முதல்வருக்கு கோடான கோடி நன்றி என்றார்.
‘ஒரு வயிற்றில் பிறப்பதற்கு அவ்வயிற்றில் இடம் இல்லை. அதனால் ஒரு கோடி தாய் வயிற்றில் பிறந்திட்ட உடன்பிறப்புகள் நாம்’ என்ற முத்தமிழ் அறிஞர் கலைஞர் வாக்கினை நிறைவேற்றும் வகையில் தமிழக மக்களை உடன்பிறப்புகளாக ஏற்று இந்தியாவுக்கு முன்னோடியாக உயிர்காக்கும் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தினை கொண்டு வந்த முதல்வருக்கு கரூர் மாவட்ட மக்கள் கோடான கோடி நன்றி தெரிவித்தனர்.
தொகுப்பு
வெ.சீனிவாசன்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், கரூர்.



