தேசிய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நாளான ஜூலை 15-ம் தேதி (இன்று) இந்த ஆண்டு முதல் உலக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நாளாக கொண்டாடப்படுகிறது என்று கோவை கங்கா மருத்துவமனை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜசபாபதி தெரிவித்துள்ளார்.
இந்திய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை சங்கத்தின் தலைவராக டாக்டர் ராஜசபாபதி 2011-ம் ஆண்டு இருந்தபோது, ஜூலை 15-ம் தேதி இந்திய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நாளாக அறிவித்து, ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வந்தது.
இந்த ஆண்டின் முன்பகுதியில், அமெரிக்க பிளாஸ்டிக் சர்ஜரி சங்கம் நடத்திய அனைத்துலக பிளாஸ்டிக் சர்ஜரி தலைவர்கள் கூட்டத்தில், தற்போதைய இந்திய தலைவர் மருத்துவர் ராகே கசான்ஜி, இந்தியாவில் நடைமுறையில் உள்ள தேசிய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நாள் பற்றி கூறினார். கூட்டத்தில், ஜூலை 15-ம் தேதியை உலக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நாளாக கொண்டாடுவது என முடிவு செய்தனர்
பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பற்றி டாக்டர் ராஜசபாபதி கூறியதாவது:
கிரேக்க வார்த்தையான “பிளாஸ்டிக்காஸ்” என்கிற வார்த்தையிலிருந்து பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை வார்த்தை உருவானது. இதற்கு “உருவாக்குதல்” என்பது பொருள்.
உடலில் உள்ள திசுக்களைக்கொண்டே இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையில் மறுசீரமைப்பு மற்றும் அழகுபடுத்துதல் என இரண்டு பிரிவுகள் உள்ளன.
இதில் முக அழகுபடுத்துல் முறை இந்தியாவில் பிரபலமடைந்து வருகிறது.
சில நேரம், குழந்தைகள் பிறக்கும் போது காணப்படும் மேல் உதடு பிளவு, காதுகள், கட்டை விரல்கள் இல்லாதிருப்பது போன்ற குறைபாடுகளையும் இச்சிகிச்சையில் சீரமைக்கலாம்.
விபத்துக்களால் இழந்த விரல்களையும் மற்றும் உடல் பாகங்களையும் ஒன்று சேர்க்க முடியும்.
உலகளவில் மருத்துவர்களுக்கு இந்தியாவில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதில் கோவை கங்கா மருத்துவமனையில் இதுவரை 70 நாடுகளைச் சேர்ந்த 2150 மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை முறையை இந்தியாவில் “சுஸ்ருதா” அறிமுகப்படுத்தினார். அவரது நினைவைப் போற்றும் வகையில் உலக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தினம் கொண்டாடப்படுவது நமக்கு பெருமைக்குரிய விஷயம்.
இவ்வாறு டாக்டர் ராஜ சபாபதி கூறினார்.