இயற்கையாக கிடைக்கும் மூலப்பொருட்களைக் கொண்டே நெகிழிக்கு மாற்றாக தேநீர் கப், காற்று புகாத குடுவை உள்ளிட்ட எண்ணற்ற பொருட்களை தயாரிக்க இயந்திரத்தை தயாரித்து உள்ளார் கோவை இளைஞர்.
சுற்றுச்சூழலுக்கு கெடுதல் விளைவிக்கும் நெகிழிப் பொருட்களை அரசு தடை செய்து உள்ளது. இருந்தாலும் குறைந்த அளவிலான மைக்ரான் கொண்டு பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. இவற்றை அழிக்கவே குறைந்தது மூன்று ஆண்டுகள் ஆகும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.
இருந்தாலும், பிளாஸ்டிக் பை, கப் போன்றவற்றை தயாரிக்க மூலப்பொருட்களை வாங்கும் சிரமம் சற்று அதிகம் தான். தொடர்ச்சியாக இத்தொழிலை நடத்த முடியவில்லை என்கிறார்கள் சிறு குறு தொழில் அதிபர்கள்.
மூலப்பொருட்களுக்காக அண்டை மாநிலத்தை எதிர்பார்க்க வேண்டி உள்ளது. கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டால், தொழில் நசிவடைகிறது. அதில் எதிர்பார்த்த லாபமும் சில நேரங்களில் கிடைப்பதில்லை என்கின்றனர் அவர்கள்.
இதற்கெல்லாம் மாற்றாக, ‘மீண்டும் மஞ்சள் பை’ இயக்கத்தை தமிழக அரசு தொடங்கி உள்ளது. ஆனால், இந்த மஞ்சள் பையை தயாரிக்கும் செலவு சற்று அதிகம் தான். விற்பனைக்கு வரும்போது தரமான மஞ்சள் பைக்கு ரூ.10 வரை ஆகும் என்கிறார்கள்.
சென்னையில் ‘மீண்டும் மஞ்சள் பை’ பிரச்சார தொடக்கத்தின்போது நடந்த கண்காட்சி பற்றி, தமிழக சுற்றுச்சூழல் முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாஹூ, அங்கு இடம்பெற்றிருந்த பலவற்றை ட்விட்டரில் பதிவிட்டார்.
அதில் ஒன்று, 39 வயதான கோவை இளம் தொழிலதிபர் எஸ்.கல்யாண குமாரைப் பற்றியது. அவரின் தயாரிப்புகளை பகிர்ந்துள்ளார். அதற்கு முன் அவரைப்பற்றி…
யார் இவர்
ஏழு ஆண்டுகளுக்கு முன், தனது தந்தையின் இயந்திரங்களை வடிவமைக்கும் தொழிலில் சேர்ந்தார் எஸ்.கல்யாண குமார். பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை அன்றாட வாழ்க்கையில் இருந்து அகற்ற தீவிரமாக முயன்றார்.
இதன் பயனாக இயற்கைக் கழிவுகளில் இருந்து ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பொருட்களைத் தயாரிக்கும் உபகரணங்களை உருவாக்குவதில் மும்முரம் காட்டினார். சேலத்தைச் சேர்ந்தவர் என்றாலும் கோவையில் தடம்பதித்தார்.
கழிவுப் பொருட்கள்
இவர் வடிவமைத்த இயந்திரத்தில், அரிசி, கோதுமை தவிடு, வாழை இலை, கிழங்குகள், தினைக் கழிவுகள், புளி விதைகள், நிலக்கடலை ஓடு, வைக்கோல் மற்றும் பிற கரிம கழிவுகள் மற்றும் கூழ் போன்ற மூலப்பொருட்களை பயன்படுத்தலாம்.
மிகவும் உற்சாகமான விஷயம் என்னவென்றால், மூலப்பொருட்களின், கிடைக்கும் தன்மையைப் பொறுத்து, அவற்றை மாற்றுவதற்கான நெகிழ்வுத்தன்மையுடன் பொருட்களைத் தயாரிக்கும் தீர்வும் உண்டு என்பதுதான்.
நெல் உமி, வாழைப்பழக் கழிவுகள் மற்றும் மரக் கூழ் போன்ற 15 மக்கும் கரிமக் கழிவுப் பொருட்களைப் பயன்படுத்தி, பத்து வகையான ஒற்றைப் பயன்பாட்டுப் பொருட்களை வெளியிடுவதற்கு அவருடைய உபகரணங்களின் வரம்பு உதவுகிறது.
ஐந்து வகையான டீ கப்கள், நான்கு வகையான ஜூஸ் மற்றும் ஒயின் கிளாஸ்கள், தண்ணீர் பாட்டில்கள், வழக்கமான பிளாஸ்க், காற்று புகாத குடுவை, பல்வேறு அளவுகள் மற்றும் தரம் கொண்ட உணவுப் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள், மறுசுழற்சி செய்யப்பட்டு, கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்தப்பட்டு, எளிதில் மக்கும் தன்மை கொண்டவை.
‘ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் பாக்கு இலையில் இருந்து பொருட்களைத் தயாரிக்கத் தொடங்கினோம். ஆனால் மூலப்பொருட்கள் தட்டுப்பாடு சவாலாக இருந்தது. அதைக் கடக்க, நாங்கள் பல கரிம கழிவுப் பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்கினோம்’ என்றார் குமார்.
அவர் தங்களது இயந்திரத்தால் தயாரிக்கப்படும் பொருட்கள் பற்றி கூறுகையில், “கிலோ 14 ரூபாய்க்கு வாங்கும் நெல் உமியைப் பயன்படுத்தி 30 டீ கப் தயாரிக்கலாம். உற்பத்திச் செலவில் கப் ஒன்றுக்கு 65 பைசா என்ற காரணியாக, சில்லறை சந்தையில் ஒவ்வொரு கோப்பையும் ரூ.1.50க்கு விற்கலாம்.
(அரசால் அங்கீகரிக்கப்பட்ட பேப்பர் கப் ஒன்று 1.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது) வாழை இலைக் கழிவுகளைப் பயன்படுத்தினால், இந்தக் கோப்பைகளை இன்னும் குறைந்த விலையில் செய்யலாம். மூலப்பொருள் மற்றும் தரத்தைப் பொறுத்து விலையை மாற்றியமைக்கலாம்,” என்றார் குமார்.
அவர் தயாரிக்கும் பொருட்கள் இயற்கைக்கு கேடு விளைவிக்காதவை. தற்போது ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் சாலைகளில் வீசியெறியப் படும் பிளாஸ்டிக் கப், பை போன்றவற்றை உட்கொள்கின்றன.
அமிலங்களால் தயாரிக்கப்பட்டவையால் அது தரும் பால் கூட உடல்நலத்திற்கு கேடு தான். ஆனால் புண்ணாக்கு, தவிடு போன்றவற்றால் தயாரிக்கப்படும் டீ கப், கிளாஸ்கள் உள்ளிட்டவை குப்பைக்கு போனாலும், அவற்றை உண்ணும் கால்நடைகளுக்கு தீங்கு விளைவிக்காது. அதற்கு அது உணவாகவே மாறிவிடும் நன்மை உள்ளது.
அவரது தயாரிப்புகள் மலிவான விலையில், குறைந்த செலவழிப்பில், கசிவு இல்லாத, காற்று புகாத பேக்கிங் விருப்பத்துடன் வருகின்றன. மெழுகு பூசப்பட்ட தட்டுகள் அல்லது வெள்ளிப் படலத்திற்கு இணையான விலையில் அவற்றை விற்கலாம்.
தற்போது, குமார் ஒரு மாதத்திற்கு கிட்டத்தட்ட 10 லட்சம் டீ கப் ஆர்டர்களைப் பெறுகிறார். மஞ்சப்பை பிரசாரம் ஒரு வரப்பிரசாதமாக அவருக்கு வந்துள்ளது.
பல அரசு துறைகள் அவரிடமிருந்து இயந்திரங்களை வாங்கி, மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு விநியோகிக்க விருப்பம் தெரிவித்துள்ளன.
இயந்திரங்களை விற்பதோடு மட்டுமல்லாமல், அவர்கள் பகுதியில் கிடைக்கும் இயற்கை மூலப் பொருட்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்ற ஆலோசனையும், சந்தைப்படுத்துதலுக்கான யுத்தியையும் வழங்கி வருகிறார்.
“ஜிஎஸ்டியை 18 சதவீதத்திலிருந்து குறைத்து, மின்சாரத்திற்கு மானியம் வழங்கினால், அதிகமான மக்கள் இந்த பொருட்களின் உற்பத்தியை மேற்கொள்வார்கள்” என்று அரசிடம் கோரிக்கையும் வைத்திருக்கிறார் குமார்.
ஆரோக்கியமானது
தமிழக சுற்றுச்சூழல் முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாஹூ தனது பதிவில், “மாற்றுப் பொருட்களை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டுள்ளவர்களை கண்காட்சிக்கு அழைத்தோம். அவர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொள்ள சுவாரஸ்யமான கதைகள் இருந்தன.
உணவுப் பாத்திரங்கள் மற்றும் தேநீர் கோப்பைகள் தயாரிக்க அரிசி தவிடு பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கும் ஆரோக்கியத்துக்கும் ஏற்றது. மாவட்ட நிர்வாகங்கள் இந்த தயாரிப்புகளை மக்களிடம் கொண்டு செல்ல முயற்சிப்பதால், இது போன்ற முயற்சிகள் எங்களுக்கு உதவும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.



