ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட 68 வது கூட்டுறவு வார விழா காட்பாடி ரங்களைய திருமண மண்டபத்தில் நடந்தது இதில் அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் காந்தி கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்தார். 1,151 பேருக்கு 10 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்
அதன்பின் அவர் பேசியதாவது: கூட்டுறவு துறையால் பல நாடுகள் முன்னேற்றம் அடைந்துள்ளன. இந்த துறையில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் நல்ல திட்டங்கள் தான். அதை செயல்படுத்துவதில் தான் பல குறைகள் உள்ளன.
அந்த குறைகள் களையப்பட வேண்டும். அதற்கு கூட்டுறவு துறையில் உள்ள அதிகாரிகள் நேர்மையாக பணியாற்ற வேண்டும்.
கடந்த ஆட்சியில் போலி நகைகள் மற்றும் போலி ஆவணங்கள் வைத்து கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றுள்ளனர்.
அவர்கள் கண்டிப்பாக கைது செய்யப்படுவார்கள்.
அந்த முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள். கூட்டுறவு வங்கியில் மகளிர் வாங்கும் கடன்களை நேர்மையாக திருப்பிச் செலுத்தி வருகிறார்கள்.
ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் நடப்பாண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் 87 ஆயிரத்து 443 விவசாயிகள் வாங்கிய 617 கோடி ரூபாய் கடன், ஐந்து பவுன் அடமானம் நகை கடன் தள்ளுபடியில் 2 லட்சத்து 476 உறுப்பினர்களுக்கு 160 கோடி ரூபாய், 25 ஆயிரத்து 803 விவசாயிகளுக்கு 170 கோடி ரூபாய்க்கு பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது
நீர் நிலைகளை எங்கு யார் ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அகரம் ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை கலெக்டர் உடனடியாக அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்
விழாவில், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, எம்.பி.,க்கள் அரக்கோணம் ஜெகத்சட்சகன், வேலூர் கதிர் ஆனந்த், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் எம்எல்ஏக்கள் வேலூர் கார்த்திகேயன் அணைக்கட்டு நந்தகுமார் ஆற்காடு ஈஸ்வரப்பன் ஆம்பூர் வில்வநாதன் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குண அய்யப்ப துரை கூட்டுறவு சங்கத் தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்



