தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள் 195 பேருக்கு உதவித் தொகைக்கு பரிந்துரை செய்யப்பட்டதில், இதுவரை 50 குழந்தை களுக்கு ரூ.160 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ளவர்களுக்கு விரைவில் வழங்கப் படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று 4 மாதங்களில் சிறப்பான நல்லாட்சியை வழங்கி கொண்டிருக்கிறார்.
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்காகவும் கொரோனா நோய்த் தொற்றினால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களை பாதுகாப்பதற்காகவும், மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்துவதற் காகவும் பல்வேறு முயற்சிகளை முதல்வர் மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாத்திடும் வகையில், கொரோனா நோய்த் தொற்றினால் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளை வழங்கிட ஏதுவாக, மாவட்ட அளவில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்புப் பணிப்பிரிவை (Special Task Force) முதல்வர் உருவாக்கினார்.
செலவுகளை அரசே ஏற்கும்
கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் தலா 5 இலட்சம் ரூபாய் வைப்பீடு செய்யப்படும்.
அந்தக் குழந்தை 18 வயது நிறைவடையும்போது, அத்தொகை அக்குழந்தைக்கு வட்டியோடு வழங்கிடவும், 2 பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு, அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும்.
அக்குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் அரசே ஏற்கும்.
அதன்படி, கொரோனா நோய்த் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணத் தொகையாக மூன்று இலட்சம் ரூபாய் வழங்கப்படும்.
அரசு காப்பகம் அல்லது விடுதிகளில் இல்லாது, உறவினர், பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்புச் செலவாக, மாதந்தோறும் தலா 3 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை, அவர்கள் 18 வயது நிறைவடையும் வரையில் வழங்கப்படும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
சிறப்புக் குழு கண்காணிக்கும்
ஏற்கனவே தாய் அல்லது தந்தையை இழந்து, தற்போது கொரோனா நோய்த் தொற்றினால் மற்றொரு பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கும் ரூபாய் 5 இலட்சம் அவர்களது பெயரில் வைப்பீடு செய்யப்படும்.
ஒவ்வொரு குழந்தைக்கும் வழங்கப்படும் உதவித் தொகை, அவர்களது கல்வி மற்றும் வளர்ச்சியும், ஒரு சிறப்புக் குழுவால் மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.
அனைத்து அரசு நலத் திட்டங்களும் முன்னுரிமை அடிப்படையில் இக்குழந்தைகளுக்கும், நோய்த் தொற்றினால் கணவன் அல்லது மனைவியை இழந்து, குழந்தையுடன் இருக்கும் பெற்றோருக்கும் வழங்கப்படும் என்பது போன்ற பல்வேறு நிவாரண உதவிகளை அறிவித்தார்.
கிடைத்தது உதவித் தொகை பிறந்தது நம்பிக்கை
தூத்துக்குடி மாநகராட்சி மில்லர்புரம் சின்னமணி நகரை சேர்ந்த பெல்சி ஹரோன் என்பவர் தெரிவித்ததாவது:
நானும், எனது தம்பியும் மில்லர்புரத்தில் வசித்து வருகிறோம். கடந்த 2013-ம் ஆண்டு எனது தந்தை இறந்துவிட்டார். எங்களது தாயுடன் வசித்து வந்தோம்.
இந்த வருடம் எங்களது தாயும் கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக இறந்துவிட்டார்.
இந்நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தோம். அப்போதுதான், தாய் தந்தை இழந்த குழந்தைகளை பாதுகாப்பதற்கு அறிவித்த உதவி தொகை திட்டத்தினை அறிந்து அத்திட்டத்தின் மூலம் உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பம் அளித்தோம்.
அதனடிப்படையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உதவி தொகை வழங்கப்பட்டது. இதன் மூலம் எதிர்காலத்தில் எனது தம்பியின் வாழ்க்கை படிப்பிற்கு உதவியாக இந்த உதவித் தொகை இருக்கும். முதல்வர் அறிவித்த இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த எங்களது குடும்பத்தின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
தங்கையின் படிப்புக்கு உதவும் திட்டம்
கயத்தாறு வட்டம் சவலாப்பேரி ஊராட்சியினை சார்ந்த லட்சுமி என்பவர் தெரிவித்ததாவது:
எனது தங்கை 12-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த வருடம் கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக தாய் மற்றும் தந்தையை இழந்துவிட்டார். எனது தங்கையின் வாழ்க்கை மிகவும் கேள்விக்குறியாக இருந்தது.
இந்த சூழ்நிலையில் முதல்வர், தாய் மற்றும் தந்தையை இழந்த குழந்தையை பாதுகாக்கும் வகையில் அறிவித்த முத்தான திட்டமான உதவித் தொகை திட்டத்தினை அறிந்தேன். குழந்தை பாதுகாப்பு அலுவலகத்தில் எனது தங்கையின் எதிர்காலத்தினை பாதுகாப்பதற்காக உதவித் தொகைக்கு விண்ணப்பித்தேன்.
அதனடிப்படையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உதவித் தொகையை வழங்கினார்கள். இதன் மூலம் வரும் காலங்களில் எனது தங்கையின் படிப்புக்கு இந்த உதவித் தொகை மிகவும் உதவிகரமாக இருக்கும்.
இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த அனைவரின் சார்பாக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
தொகுப்பு:
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
தூத்துக்குடி மாவட்டம்.



