தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் நாட்டின மாடுகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் ஒரு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால் 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற வெளிநாட்டு கலப்பின மாடுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இத்தகைய மாடுகள் பருமனாக இருக்கும். இதன் திமில்கள் மிக சிறிய அளவிலேயே இருக்கும். இதன் காரணமாக இந்த கலப்பின காளைகளை களத்தில் அடக்குவது என்பது சாத்தியமில்லாமல் போகும்.
ஆகவே கலப்பின காளைகள் போட்டியில் பங்கேற்க தடை விதிக்க கோரும் பொது நல வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டுக் காளைகள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்க வேண்டும்.
வெளிநாட்டு காளைகள், கலப்பின காளைகள் பங்கேற்க அனுமதிக்க கூடாது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் நாட்டு காளைகள் தான் என்று பொய் மருத்துவ சான்றிதழ் அளித்தால் நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவு வரவேற்புக்குரியது. நாட்டு காளைகளை வளர்ப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு மானியம், ஊக்கத்தொகை போன்றவற்றை அரசு வழங்கலாம் என்றும் பரிந் துரைத்துள்ளனர்.
ஆகவே இனிவரும் காலங்களில் நாட்டுக்காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் என்று நம்பலாம்.
அரசும் இதற்கு ஆதரவும் ஊக்கமும் தரவேண்டும். அப்போது தான் தமிழர்களின் வீரவிளையாட்டு மேலும் ஜொலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.



