விருதுநகர் இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோவிலில் பாலம் கட்டுவதற்கும், சுற்றுச்சுவர் அமைப்பதற்கும், கடைகள், பக்தர்கள் தங்கும் இடங்கள், திருப்பணிகள் உள்ளிட்ட சுமார் ரூ.40 கோடிக்கும் மேலான பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன என்று அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.
விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறையின் மூலம், காணிக்கையாக வரப்பெற்று, கோவில் உபயோகத்திற்கு பயன்படுத்த இயலாத, பலமாற்று பொன் இனங்களை, சுத்த தங்கமாக மாற்றி, தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்யும் வகையில், நீதியரசர் (ஓய்வு) ஆர்.மாலா தலைமையில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் (விருதுநகர்), ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் (சாத்தூர்), எஸ்.தங்கப்பாண்டியன் (இராஜபாளையம்) ஆகியோர் முன்னிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் (சாத்தூர் கிளை) பாரத ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளரிடம் ஒப்படைத்தனர். வடக்கு பரிகார மண்டபத்தினை ரூ.42.50 இலட்சம் மதிப்பில் கான்கீரீட் மண்டபமாக நீட்டித்து கட்டும் பணிகளுக்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தனர்.
பின்னர், திருக்கோவில் வளாகத்தில் ரூ.3.48 இலட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட நூலகக் கட்டிடத்தைத் திறந்து வைத்தனர்.
கலைஞரின் தல மரக்கன்று நடும் திட்டத்தின் கீழ், திருக்கோவிலின் தல விருட்சமாக மூன்று மூவிலை வில்வ மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். ரூ.36 இலட்சம் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட நவீன கழிப்பறை வளாகத்தை பக்தர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
பின்னர் அமைச்சர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முதலமைச்சர் வழிகாட்டுதலின் படி, தமிழ்நாடு சட்டமன்ற அறிவிப்பு 2021-&22- ன் படி கடந்த 10 ஆண்டுகளாக திருக்கோவில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்று பொன் இனங்களில் திருக்கோயிலுக்குத் தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, ஏனைய இனங்களை மும்பையிலுள்ள ஒன்றிய அரசுக்குச் சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி சொக்கத்தங்கமாக மாற்றி திருக்கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கிகளில் முதலீடு செய்து, அதிலிருந்து பெறப்படும் வட்டி மூலமாக திருக்கோவில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
இப்பணிகளை கண்காணிப் பதற்கு 3 மண்டலங்கள் ஏற்படுத்தப் பட்டு ஓய்வுபெற்ற நீதியரசர்கள் தலைமையிலான குழுக்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.
இவ்வறிவிப்பினை செயல் படுத்தும் வகையில் மதுரை மண்டலத்திற்கான தலைவராக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர்.மாலா தலைமையிலான குழு அரசால் அமைக்கப்பட்டது.
அதன்படி, இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோவி லுக்கு பக்தர்களால் உண்டியலில் மற்றும் காணிக்கையாக செலுத்த ப்பட்ட பொன் இனங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு திருக்கோயிலின் உபயோகத்திற்கு தேவைப்படாமல் தொகுப்பாக வைக்,கப்பட்டிருந்த பலமாற்றுப் பொன் இனங்கள் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர்.மாலா முன்னிலையில் 13.10.2021, 18.10.2021, 19.10.2021, 20.10.2021 ஆகிய நாட்களில் அரக்கு, அழுக்கு, போலிக்கற்கள் மற்றும் இதர உலோகங்கள் நீக்கப்பட்டு 27,236.600 கிராம் எடையுள்ள பலமாற்றுப் பொன் இனங்கள் பிரித்தெடுக்கப்பட்டன.
மேற்படி அரக்கு, அழுக்கு, போலிக்கற்கள் மற்றும் இதர உலோகங்கள் நீக்கப்பட்ட பலமாற்றுப் பொன் இனங்களை இத்திருக்கோவல் பரம்பரை அறங்காவலர் குழுத் தீர்மானத்தின் அடிப்படையில், மும்பையிலுள்ள ஒன்றிய அரசுக்கு சொந்தமான உருக்காலையில் உருக்கி சுத்தத்தங்கக் கட்டிகளாக மாற்றி RBI வங்கியின் Revamped Gold Deposit Scheme, 2015 (GDS, 2015) திட்டத்தின் கீழ் தங்கப்பத்திரமாக முதலீடு செய்திடும் பொருட்டு, 27 கிலோ 236.600 கிராம் பலமாற்றுப் பொன் இனங்கள் திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் பாரத ஸ்டேட் வங்கி, சாத்தூர் கிளை முதன்மை மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட பல மாற்றுப் பொன் இனங்கள் பாரத ஸ்டேட் வங்கியின் மூலமாகவே ஒன்றிய அரசுக்குச் சொந்தமான மும்பை உருக்காலை நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, மும்பை உருக்காலையில் மாண்பமை நீதியரசர் (ஓய்வு) மற்றும் திருக்கோவில் நிர்வாகிகள் முன்னிலையில் மீண்டும் எடை போடப்பட்டு, சுத்தத் தங்கக் கட்டிகளாக மாற்றி பாரத ஸ்டேட் வங்கியில் தங்கப்பத்திரங்களாக இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் பெயரில் முதலீடு செய்யப்படும்.
இதன் மூலம் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து மாதம் தோறும் ரூ.2 லட்சம் வட்டி வீதம் வருடத்திற்கு ரூ.24 லட்சம் கிடைக்கப்பெறும். இந்த வட்டி தொகை இத்திருக்கோவிலின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு திருக்கோவில் திருப்பணி மற்றும் திருக்கோவில் சார்ந்த இதர பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.
முதலமைச்சர் தலைமை யிலான அரசு இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் திருக்கோவில்களை மேம்படு த்தவும், பக்தர்கள் வருகையை அதிகப்படுத்துவதற்கும், தேவை யான வசதிகளை செய்வதற்கும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப் பட்டு செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, தமிழகத்தில் உள்ள திருக்கோயில்கள் ஆய்வு செய்யப்பட்டு, திருப்பணிகள் மற்றும் குடமுழுக்கு நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது வரை 106 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
1000-த்திற்கும் மேற்பட்ட திருக்கோவில்களுக்கு திருப்பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன. இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோவிலில் பாலம் கட்டுவதற்கும், சுற்றுச்சுவர் அமைப்பதற்கும், கடைகள், பக்தர்கள் தங்கும் இடங்கள், திருப்பணிகள் உள்ளிட்ட சுமார் ரூ.40 கோடிக்கும் மேலான பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன.
குடமுழுக்கு நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். முதலமைச்சர் தலைமையிலான அரசு இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் ஒரு பொற்காலம் என அனைவராலும் போற்றப்படும் வகையில் திருக்கோவில்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தொடர்ந்து செய்து வரும். இவ்வாறு அமைச்சர்கள் தெரிவித்தனர்.
இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் (மதுரை) சி.குமரதுரை, இந்து சமய அறநிலையத்துறை இணை இயக்குநர் பாஸ்கரன், சாத்தூர் கோட்டாட்சியர் புஷ்பா, உதவி ஆணையர் / செயல் அலுவலர் கருணாகரன், தலைவர், பரம்பரை அறங்காவலர் குழு இராமமூர்த்தி பூசாரி, சாத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் நிர்மலா கடற்கரைராஜ், விருதுநகர் நகர்மன்ற தலைவர் மாதவன், விருதுநகர் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் சுமதி இராஜசேகரன், சாத்தூர் வட்டாட்சியர் சீதாலெட்சுமி, அறங்காவலர்கள் மற்றும் பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



