சென்னை சிறுபான்மையினர் நல இயக்குநர் சுரேஷ் குமாருக்கு கோவை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் செயலாளர் அப்துல் ஹக்கீம் அனுப்பி உள்ள மனுவில் தெரிவித்து இருப்பதாவது:
கோவை மாநகரின் கரும்புக்கடை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். இப்பகுதியில் மூன்று தனியார் பள்ளிகளும் ஒரு அரசு தொடக்கப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது.
இப்பகுதியில் பல தொழில் மற்றும் வியாபார நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. ஆனால், இப்பகுதியில் கீழ்காணும் அடிப்படை மற்றும் மேம்பாட்டு வசதிகள் பல முறை மாவட்ட நிர்வா கத்திற்கு தேவை என தெரியப்படுத்தியும் இன்றளவும் எந்த வசதிகளையும் இப்பகுதியில் முழுமைப்படுத்தப்படவில்லை.
இப்பகுதியில் சரியான வங்கி வசதி இல்லை. டவுன்ஹால், குனியமுத்தூர் அல்லது போத்தனூருக்கு சென்றுதான் வங்கி சேவையை பெறமுடிகிறது. வங்கி கிளை துவங்க கடந்த 10 ஆண்டுகளாக பொதுமக்கள் சார்பாக மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
வங்கிக்கான இடம் மற்றும் கட்டிடம் கட்டித்தரவும் இப்பகுதி மக்கள் தயாராக உள்ள நிலையில் வங்கிகள் தங்களது கிளையினை அமைத்திட தயக்கம் காட்டி வருகிறது.
இப்பகுதியில் ஒரு அரசு தொடக்கப்பள்ளி மட்டுமே செயல்பட்டு வருகின்றது.
இப்பள்ளியில் 90 மாணவர்களுக்கான வசதிகள் மட்டுமே உள்ளது. இப்பகுதி மாணாக்கர்கள் பெரும்பாலும் பொருளாதார ரீதியாக சாதாரண குடும்பத்தை சார்ந்தவர்கள் என்பதால் உயர் கல்விக்காக தனியார் பள்ளிகளுக்கோ அல்லது வெளிப்பகுதியில் உள்ள அரசு உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கோதான் செல்ல வேண்டியுள்ளது.
எனவே இப்பகுதியில் செயல்படும் துவக்கப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் அல்லது புதிய மேல்நிலை பள்ளியினை உக்கடம் கழிவுநீர்ப் பண்ணை அருகே இருக்கும் அரசு நிலத்தில் கட்டிடவேண்டும்.
இப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர்கள் தினமும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று கல்வி பயின்று வருகின்றனர். இம்மாணாக்கர்களின் அறிவு மேம்பாட்டிற்கு உதவும் வகையிலான நூலகம் இப்பகுதியில் இல்லை.
நாட்டின் எதிர்கால தலைமுறையின் அறிவு, ஆற்றல் மேம்பாட்டினை உயர்த்த உதவும் வகையில் ஒரு சிறந்த நூலகம் அமைத்திட வேண்டும்.
இப்பகுதியில் சிறார்கள் மற்றும் பெண்களுக்கு பொழுதுபோக்கு வசதிகள் இல்லை. எனவே இப்பகுதியில் பூங்கா வசதி மற்றும் சிறார்களுக்கான விளையாட்டு மைதானம் ஏற்படுத்த வேண்டும்.
இப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பிரசவ நிலையம் அமைத்திட வேண்டும். மதுக்கரை, குனியமுத்தூர், போத்தனூர், கரும்புக்கடை பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர்கள் தினமும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று கல்வி பயின்று வருகின்றனர்.
இவர்களுக்கான பேருந்து வசதி மிகவும் குறைவாகவே உள்ளது. காலை-மாலை வேளைகளில் நெருக்கடியை குறைக்கும் வகையில் கூடுதல் பேருந்துகளை மற்றும் மினிபஸ்கள் இயக்கிட வேண்டும்.
கரும்புக்கடை சாரமேடு சாலையானது மிகுந்த போக்குவரத்து நெருக்கடியாக உள்ளது. இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நெருக்கடியை குறைக்க வேண்டும்.
மேலும் இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு உதவும் வகையில் கரும்புக்கடை முதல் நஞ்சுண்டாபுரம் வரை மினிப் பேருந்து, ஷேர் ஆட்டோ, அல்லது பேட்டரி கார்கள் இயக்கிட வேண்டும்.
கரும்புக்கடை மற்றும் போத்தனூர் என்.பி.இட்டேரி பகுதிகளில் குடிநீர், சாலை, சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர நிறைவேற்றிடப் படவில்லை.
மேலும், இப்பகுதியில் குப்பைகளை அகற்றும் பணியில் மிகக்குறைந்த சுகாதாரப் பணியாளர்களே உள்ளதால் கோவையில் பெண்களுக்கான அரசு கல்லூரி இல்லை என்பதால் முஸ்லிம் பெண்களின் மேற்படிப்பு தடைபடுகிறது.
முஸ்லிம் பெண்களின் மேற்படிப்பு தொடர்வதற்கு உதவும் வகையில் அரசு பெண்கள் கலைக்கல்லூரி, ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஆகியவை துவங்க வேண்டும்.
மாணாக்கர்களுக்கு கல்வி உதவித்தொகை முறைப்படி கிடைப்பதில்லை.
கல்வி உதவித்தொகை முறையாகவும் எளிமையாகவும் கிடைப்பதற்கு ஆவன செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். மேலும் கல்விக்கான வங்கிக் கடன் நடைமுறைகளை எளிமைப்படுத்திட வேண்டும்.
கரும்புக்கடை பகுதியில் ஓடும் நொய்யலாறு தூர் வாரி கரைகளை பலப்படுத்தி தரவேண்டும். கரும்புக்கடை உள்பகுதியில் உள்ள ராஜவாய்க்கால் மிகவும் அசுத்தமடைந்து குப்பை கூளமாக சாக்கடையாக உள்ளது இந்த ராஜவாய்க்காலை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றி தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மாணவ இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் கஞ்சா புதிய வகையான போதை மருந்துகள் அதிகமாக புழக்கத்தில் உள்ளன. இதை இரும்புக் கரம் கொண்டு அடக்கி நடவடிக்கைகள் எடுத்து இளைஞர் மாணவ சமுதாயத்தை காப்பாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
சிறுபான்மை மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கரும்புக்கடை பகுதியில் சார மேடு சாலையில் வார்டு 75ல் அதிகமான ஆக்கிரமிப்புகள் காணப்படுகின்றன
சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு களை அகற்றி நஞ்சுண்டாபுரம் வரை சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து புதிய சாலைகள் தருமாறு சிறுபான்மை மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



