ஈமு கோழி பண்ணை நடத்தி ரூ.62.5 லட்சம் மோசடியில் ஈடுபட்ட உரிமையாளருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ 40 லட்சம் அபராதம் விதித்து கோவை டான் பிட் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பழவஞ்சிபாளையத்தை சேர்ந்தவர் ஏ.ஜி. குமார் (39). இவர் திருப்பூர் மெயின் ரோடு ராயபு ரத்தில் ‘ஸ்ரீ குபேரன்’ என்ற பெயரில் ஈமு கோழிப்பண்ணையை கடந்த 2014ல் நடத்தி வந்தார். இவர் இரண்டு திட்டங்களை அறிமு கப்படுத்தினார்.
முதல் திட்டத்தில் ரூ 1.5 லட்சம் முதலீடு செய்தால் ஈமு கோழி குஞ்சுகள் கொடுத்து, பராமரிப்பு தொகையாக மாதம் ரூ.7000 வழங்கப்படும் எனவும், ஆண்டு போனஸ் ரூ 20 ஆயிரம் மற்றும் 2 ஆண்டுகளில் முதலீடு தொகை கொடுக்கப்படும் எனவும், விஐபி திட்டத்தில் ரூ. 2 லட்சம் செலுத்தினால், மாத பராமரிப்பு தொகை ரூ 8,000 மற்றும் 2 ஆண்டுகளில் மொத்த தொகை திருப்பி வழங்கப்படும் எனவும் விளம்பரம் செய்தார்.
இதனை நம்பி திருப்பூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் பணம் செலுத்தினர். அவர் களிடம் ரூ. 62.5 லட்சம் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட தாராபுரத்தை சேர்ந்த ராஜாமணி 49 என்பவர் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் குமாரை கைது செய்து பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை டான் பிட் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணை இன்று நடை பெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.எஸ்.ரவி மோசடியில் ஈடுபட்ட குமாருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.40 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் அவர் நேரில் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.



