ஈரோடு மாநகராட்சி கூட்டம் மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் தலைமையில் நடந்தது .ஆணையர் சிவகுமார் துணை மேயர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல உறுப்பினர்கள் சொத்து வரி உயர்வு முரண்பாடுகள் குறித்து பேசினர்.
அதிமுக உறுப்பினர்கள், 12 ஆண்டுகளுக்கு முன்பு வரி உயர்வு செய்யப்பட்டது, எனவே மீண்டும் வரியை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறி வெளிநடப்பு செய்தனர்.
திமுக உறுப்பினர்கள் பலர், சொத்து வரி உயர்வு மக்களை பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும். மக்களிடமிருந்து வரி பெறுகிறோம். ஆனால் எந்த பகுதியும் தன்னிறைவு பெறவில்லை. தன்னிறைவு. பெற்ற பின்பு வரியை உயர்த்தலாம். அதிகாரிகள் சரியாக ஒத்துழைப்பு தருவதில்லை.
அனைத்து சாலைகளும் மோசமாக உள்ளன. குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் தோண்டப்பட்ட சாலைகள் பழுதடைந்துள்ளன .சாலை போடுவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.
சாலைபோடுவதும் பிறகு மீண்டும் அந்த சாலை களை பறிப்பதும் என பல இடங்களில் வேலை நடந்து கொண்டிருக்கிறது. பணிகள் மேற்கொள்ளும் போது மாமன்ற உறுப்பினர்கள் அனைவரை யும் கலந்து ஆலோசித்து திட்டப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பேசினர்.
இதற்கு பதிலளித்த மாநகராட்சி ஆணையர், சுய மதிப்பீட்டு படிவம் வீட்டு வரி செலுத்துபவர்களுக்கு வழங்கப்படும். அதன் அடிப்படையிலேயே வரி உயர்வு செய்யப்படும். அரசு ஆணைப்படி 25% 50 சதம் 75 சதம் என வரி உயர்வு செய்யப்படுகிறது.
சராசரியாக ஒரு 600 சதுர அடிக்கு குறைவாக உள்ள வீட்டிற்கு வரி உயர்வு ரூபாய் 50 மட்டுமே இருக்கும் என்று குறிப்பிட்டார். பின்னர் கவுன்சிலர்கள் தெரிவித்த கோரிக்கைகள்: மாநக ராட்சி பூங்காக்கள கொரோனா குறைந்துள்ளதால் திறக்கப்பட வேண்டும். மகாகவி பாரதியார் இறு தியாக உரையாற்றியபொது நூலகம் கருங்கல்பாளையத்தில் உள்ளது.
அதை புனரமைக்க வேண்டும். ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட ஆத்மா மின்மயானம் பொதுமக்க ளுக்கு பல சிரமங்களை தருகிறது எனவே மாநகராட்சி அதை பராம ரிக்க வேண்டும்.
வீட்டு வரி ரூபாய் 700 என்று இருந்தது குப்பை வரி யுடன் 2000 ரூபாய் ஆகிறது. சென்னை மாநகராட்சி போல் குப்பை வரியை நீக்க வேண்டும் . பல வார்டுகளில் துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் தூய்மைப் பணி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு ஓபன் டெண்டர் வெளியிட வேண்டும். தெருவிளக்கு வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். பல இடங்களில் வெளிச்சம் இல்லாமல் உள்ளது .அதை சரி செய்ய வேண்டும்.
குடிநீர் இணைப்புகள் பல இடங்களில் தரப்படவில்லை .இதைப் பற்றி கேட்டால் சரியான பதில் அதிகாரியிடம் இருந்து வருவதில்லை .கடந்த அதிமுக ஆட்சியின்போது தேர்தலுக்கு முன்பு ரூபாய் 80 கோடி கடன் வாங்கி சாலைகள் போடப்பட்டன.
அதற்காக ரூபாய் 5 கோடி வட்டி கட்டிக் கொண்டு வருகிறோம் .ஆனால் அந்த சாலைகள் மீண்டும் குடிநீர் மற்றும் சாக்கடை வசதிக்காக தோண்டப்பட்டுள்ளது. அவைகளெல்லாம் சரிசெய்யப்பட வேண்டும் இவ்வாறு அவர்கள் பேசினர்.
மாநகராட்சி ஆணையர் பிரச்சினைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.



