கோவை மாவட்டத்தில் பட்டா மாறுதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், நில மாற்றம், நிலக்குத்தகை தொடர்பாக நிலுவையில் உள்ள கோப்புகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசு முதன்மைச் செயலாளர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அரசு செயலாளர் குமார்ஜெயந்த் பேசினார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (ஆக.3) அரசு முதன்மைச் செயலாளர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அரசு செயலாளர் குமார்ஜெயந்த் தலைமையில், வருவாய் துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் அரசு முதன்மைச் செயலாளர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அரசு செயலாளர் குமார்ஜெயந்த் தெரிவித்ததாவது:
வருவாய்த் துறை மாநிலத்தின் நிர்வாக அமைப்புக்கு முதுகெலும்பாக விளங்குகிறது. சீரான சமூக வளர்ச்சிக்கு இத்துறையின் பங்கு மிகவும் முக்கியமாகும்.
சாமானிய மக்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்வதில் வருவாய்த் துறையின் பங்களிப்பு இன்றியமையாததாகும்.
வருவாய்த்துறை கிராமங்கள் முதல் நகரங்கள் வரை முழுமையான கட்டமைப்பினை கொண்டுள்ளதால், சமூக பாதுகாப்புத் திட்டங்களை திறம்பட செயல்படுத்த முடிகிறது. அரசின் பல்வேறு சமூக பொருளாதார திட்டங்கள் இத்துறையின் மூலம் செயல்படுத்தப்படுகின்றன.
விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் ஆதரவற்றோர், முதியோர் மற்றும் சமூகத்தின் அனைத்து பிரிவினரும் அரசின் உதவித் தொகையை பெறுவதற்கும் தொழில் முனைவோர் மற்றும் பொது, தனியார் தொழிற்சாலைகள் பயன்பெறும் வகையில் பல்வேறு விதமான சான்றிதழ்களையும் சாதி, பிறப்பு, இறப்பு, வாரிசு சான்று, வருமான சான்று, பட்டா மாறுதல் சான்று மற்றும் பல்வேறு உரிமங்கள் ஆகியவற்றை இத்துறை வழங்கி வருகிறது.
எனவே கோவை மாவட்டத்தில் பட்டா மாறுதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், நில மாற்றம், நிலக்குத்தகை தொடர்பாக நிலுவையில் உள்ள கோப்புகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் தகுதியுடைய மனுதாரர்களுக்கு விரைந்து நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மீதமுள்ள மனுதாரர்களுக்கு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மனுக்களின் மீது விரைந்து தீர்வு காண வேண்டும்.
சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளி உதவித்தொகை. விதவைகள் உதவித்தொகை கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை, இயற்கை மரணம் உதவித்தொகை, விபத்து மரண உதவித்தொகை ஆதரவற்றோர் உதவித்தொகை போன்ற பல்வேறு உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இவை தகுதியான பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
இவ்வாறு அரசு முதன்மைச் செயலாளர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அரசு செயலாளர் குமார்ஜெயந்த் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ், பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், உதவி ஆட்சியர் (பயிற்சி) சரண்யா, வருவாய் கோட்டாட்சியர்கள் ரவிச்சந்திரன், செந்திலரசன் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



