இந்திய கடற்படைதினம் கொண்டாட்டம் அனைத்து மக்களின் முக்கியமாக இளைஞர்களின் உற்சாகப் பங்களிப்புடன் நடைபெற்றது.
கடற்படை தினத்தை கொண்டாடும் விதமாக, கோவை ஐ.என்.எஸ் அக்ரானியில் உள்ள போர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஐ.என்.எஸ் அக்ரானி கமாண்டிங் அதிகாரி கமடோர் அசோக் ராய் போர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து போரில் இன்னுயிர் நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.
இவ்விழாவில் கோவையில் பணிபுரியும் கடற்படை ஊழியர்களின் குடும்பதினர் மட்டுமின்றி முன்னாள் ராணுவத்தினர், தேசிய மாணவர் படை மாணவர்கள், கோவை நேவி குழந்தைகள் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.
முன்னதாக கடற்படை வார கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, கோவை ஐ.என்.எஸ் அக்ரானி, ஆரோக்யா, நேவி மனைவிகள் நல சங்கத்துடன் இணைந்து , அக்ரானியின் மருத்துவக்குழுவின் உதவியுடன் கோவை அருகே உள்ள ரொட்டிக்கவுண்டனூரில் உள்ள சினேகாலயா குழந்தைகள் இல்லத்தில் உள்ளவர்களுக்காக மருத்துவ முகாம் மற்றும் கோவை மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து ரத்த தான முகாம் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
“வீர் நாரிஸ்” (போர் விதவைகள்) அவர்களின் இல்லத்தில் வைத்து பாராட்டப்பட்டனர். கடற்படை வாரத்தை நினைவுகூரும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
மேலும் அனாதை இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கும் உதவிகள் செய்யப்பட்டன.



