பணிச்சுமை காரணம் உள்ளிட்டவற்றால், ஆண்டுதோறும் 2 கோடி பேர் உயிரிழக்கின்றனர் என ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்தது.
உலக சுகாதார அமைப்பு (WHO), சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) இணைந்து இதுபோன்ற ஆய்வை முதல் முறையாக நடத்தியது.
உழைக்கும் சமூகத்திற்கும் மற்றவர்களுக்கும் இந்த ஆய்வு முடிவுகள் பெரும் அதிர்வலையைத் தோற்றுவித்தன.
நீண்ட நேரம் வேலை, உடல் காயங்கள், காற்றுமாசு உள்ளிட்டவற்றுடன் தொடர்புடைய நோய்கள் இந்த உயிரிழப்பில் அடங்கும்.
கடந்த 2016-ம் ஆண்டில் 1.9 மில்லியன் மக்கள் உயிரிழப்பதற்கு, பணிச்சுமை தொடர்பான காரணங்கள் தான் எனக் கண்டறியப்பட்டது.
உலக சுகாதார அமைப்பின் டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸ், இந்த ஆய்வு தொடர்பாக கூறியதாவது:
இந்த ஆய்வறிக்கை ஓர் எச்சரிக்கை உணர்வை வெளிப்படுத்தி உள்ளது. உண்மையில் பலர் உயிரிழப்பதற்கு அவர்களது வேலையே காரணம் என அறியும்போது அதிர்ச்சியாக இருக்கிறது.
19 வகையான பணிச்சூழல் காரணமாக இந்த சம்பவங்கள் நிகழ்கின்றன. காற்று மாசுபாடு, நீண்ட வேலை நேரங்கள், புற்றுநோய்கள் உருவாகக்காரணமாக இருக்கும் ஆஸ்பெஸ்டாஸ்ஷீட்களின் கீழ் பணிபுரிவது, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது, பணிபுரியம் இடத்தில் தொடர்ந்து இரைச்சல், இது போன்றகாரணிகள் தான்உயிருக்கு ஆபத்தை விளைவிக்கின்றன.
தென்கிழக்கு ஆசியா, மேற்கு பசிபிக் பகுதிகளில் 54 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் பெரும்பாலோனார் இறப்பதற்கு, நீண்ட நேர பணிச்சுமை நோய்கள்தான் காரணம் எனத் தெரிந்தது. ஆண்டொன்றுக்கு பக்கவாதம், இருதய நோய்களால் சுமார் 745,000 பேர் இறக்கின்றனர்.
வாரத்திற்கு குறைந்தது 55 மணி நேரம் பணிபுரியும் போது, உயிரிழப்பு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய இருதய நோய், பக்கவாதம் ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதுவே வாரத்திற்கு 35 முதல் 40 மணி நேரம் பணிபுரியும் போது, இந்த பாதிப்பு குறைந்து காணப்படுகிறது.
2016-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, இதற்கு போதுமான ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளது.
கடந்த 2000-&2016-ம் ஆண்டு கால கட்டத்தில், நீண்ட நேரம் பணி செய்ததன் காரணமாக மனஅழுத்தம் ஏற்பட்டு இருதய நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 42 சதவிகிதமும், பக்கவாதத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 சதவிகிதமும் அதிகரித்துள்ளது.
இவ்வாறு உலக சுகாதார அமைப்பின் டைரக்டர் ஜெனரல் தெரிவித்தார்.



