fbpx
Homeதலையங்கம்விக்கிரவாண்டியில் அதிமுக ஓட்டு யாருக்கு?

விக்கிரவாண்டியில் அதிமுக ஓட்டு யாருக்கு?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடையவுள்ளது. இந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அன்புமணிக்கு ஆதரவாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸும் அவரது மனைவி சௌமியா அன்புமணியும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக பிரதான எதிர்க் கட்சியான அதிமுக அறிவித்த நாள் முதலே அவர்களின் வாக்கு யாருக்கு? என்ற கேள்வி எழுந்தது. அதிமுகவினர் திமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என கணக்கு போட்டு, தங்கள் கட்சி வேட்பாளரான சி.அன்புமணிக்கு வாக்களிக்க வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸும், தலைவர் அன்புமணியும் தேர்தல் பிரச்சாரத்தின்போது, வெளிப்படையாகவே கோரிக்கை விடுத்தனர்.

பாஜக கூட்டணிக்கு மறைமுக ஆதரவை தருவதற்காகத் தான் தேர்தல் புறக்கணிப்பு நாடகத்தை அதிமுக அரங்கேற்றி இருப்பதாக திமுக கூட்டணி கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தன. அதற்கு எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். முன்னுதாரணமாக ஜெயலலிதா எடுத்த முந்தைய முடிவுகளை முன்வைத்தார்.

பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்களுக்கும் கருத்து மோதல் வழக்கமான ஒன்று தான் என்றாலும், நாளை மறுதினம் விக்கிரவாண்டியில் வாக்குப்பதிவு நடைபெறப் போகும் நிலையிலும் அவர்கள் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அதிமுக கரைந்து வரும் கட்சி, எடப்பாடி பழனிசாமி துரோகி என்ற அண்ணாமலையின் கடுமையான குற்றச்சாட்டு, அதிமுகவினரை கொந்தளிப்படைய செய்திருக்கிறது. இதற்கு அதே பாணியில் அண்ணாமலை தான் பச்சைத் துரோகி, பச்சோந்தி என எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

பாமகவுக்கு வாக்களிப்பது என்பது கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பாஜகவுக்கு வாக்களிப்பதற்கு சமம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆக, இந்த மோதல் விக்கிரவாண்டி தேர்தலில் பாமகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

பாமகவிற்கே வாக்களிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த அதிமுகவினர் பலரின் முடிவை அண்ணாமலையின் பேச்சு மறுபரிசீலனை செய்ய வைத்து விட்டதாகவே மாற்றுக்கட்சியினர் குதூகலிக்கிறார்கள்.
அதையும் மீறி அதிமுகவினரின் வாக்குகள் பாமகவுக்கு விழுமா? அல்லது அண்ணாமலைக்கு எதிராக வாக்குகள் பிரிந்து திமுகவிற்குச் சாதகமாகப் பதிவாகப் போகிறதா?
விக்கிரவாண்டி தேர்தல் களம் சூடாகத் தான் இருக்கிறது!

படிக்க வேண்டும்

spot_img