கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் வனச்சரக பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட வன உயிரினங்கள் தாகம் தீர்க்க வனத்துறையால் கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்பும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் அமைந்துள்ள மேட்டுப் பாளையம் வனச்சரக பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, மான் என ஏராளமான வன உயிரினங்கள் உள்ளன.

மேட்டுப்பாளையம் வனப்பகுதி யானைகளின் வலசை பாதை என்பதால் காட்டு யானைகளின் எண்ணிக்கை அதிகம்.
கடந்த மூன்று மாத காலத்திற்கும் மேலாக இக்காட்டு பகுதியில் போதிய மழை இல்லாத காரணத்தினாலும் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்க துவங்கிவிட்டதாலும் வனத்தினுள் உள்ள இயற்கையான நீராதாரங்கள் வறண்டு வருகின்றன.
வனக்குட்டைகள், நீரோடைகள், மழை நீர் தடுப்பணைகள் என அனைத்தும் காய்ந்து போய் காட்டுக்குள் வாழும் வன உயிரினங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு உருவாகியுள்ளது.

வனத்தினுள் நீர் கிடைக்காத போது யானை போன்ற வன விலங்குகள் காட்டையொட்டி யுள்ள ஊர்களுக்குள் தண்ணீர் தேடி நுழைந்து விடும் என்பதால் இதனை சமாளிக்க வன எல்லைகளில் வனத்துறை சார்பில் செயற்கையாக தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டு அதில் நீர் நிரப்பி வைப்பது வழக்கம்.
தொட்டியில் உள்ள நீரை அருந்தி தாகம் தீர்க்கும் யானைகள் ஊருக்குள் புகாமல் காட்டுக்குள் திரும்பி விடும்.
இதனால் கோடை காலங் களில் வனத்தினுள் ஏற்படும் வறட்சி ஓரளவேனும் சமா ளிக்கப்பட்டு யானை-மனித மோதல்கள் தவிர்க்கப்படும். யானைகள் தூய்மையான நீரை மட்டுமே குடிக்கும் என்பதால் இத்தொட்டிகளை சுத்தப்படுத்தி தண்ணீர் நிரப்பும் பணியினை வனத்துறை துவங்கியுள்ளது.

கோடை காலத்தை சமாளிக்கும் வகையில் தொட்டிகளை சீரமைத்து பாசி படர்ந்து கிடந்த தண்ணீரை வெளியேற்றி சுத்தமான நீரை நிரப்பும் பணியில் வனத்துறை ஈடுபட்டு வருகிறது.
இதற்காக நகர பகுதிகளில் இருந்து சுத்தமான தண்ணீர் வாக னங்கள் மூலம் காட்டுக்குள் எடுத்து வந்து நீர் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த நீரை யானைகள் கூட்டமாக வந்து அருந்தி தாகம் தீர்த்து வருகின்றன.



