இந்திய கடற்படை அலுவலர்களுக்கு எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி கல்வியில் முதுகலை பட்டபடிப்பு மற்றும் பி.எச்டி பட்டபடிப்பு வழங்கவும், எஸ்ஆர்எம் மாணவர்கள், பேராசிரியர்கள் கடற்படை தொழில் நுட்பத்தை அறிந்து கொள்ளவும், ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடவும் இந்திய கடற்படை, கடற்படை நலன் மற்றும் ஆரோக்கிய சங்கம் மற்றும் எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம் இணைந்து ஒப்பந்தம் செய்துள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நிகழ்வு சென்னை, காட்டங்குளத்தூர் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது.
இதில் இந்திய கடற்படை தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைகள் பிரிவு ரியர் அட்மிரல் பி. சிவகுமார், கடற்படை நலன் மற்றும் ஆரோக்கியம் சங்க தலைவி கலா ஹரிக்குமார், எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் துணைவேந்தர் முனைவர் சி. முத்தமிழ்ச்செல்வன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையொப்பமிட்டு ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்டனர்.
ஒப்பந்தத்திற்கு பின் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் கடற்படை ரியர் அட்மிரல் பி. சிவகுமார் கூறியதாவது: கடற்படைக்கு தேவையான சாதனங்கள் இறக்குமதி செய்வதை குறைக்கும் வகையில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் அந்த சாதனங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கும் வகையில் அதற்கான மாதிரிகள், சாதனங்கள் உருவாக்கும் ஆராய்ச்சிகளில் மாணவர்கள் ஈடுபடவேண்டும். மாணவர்கள் தங்களின் திறன் வளங்களை பயன்படுத்த வேண்டும். இந்திய கடற்படை ஏற்கனவே உலக தரத்திற்கு ஏற்ற தொழில்நுட்பங்களை கையாண்டு வருகிறது.
கடற்படையின் நீர் முழ்கி கப்பல் தொழில்நுட்பம், போர் கருவிகள், சென்சார் முறைகள் கடற்படையின் வலிமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.
இந்த ஒப்பந்தம் மூலம் கடற்படை அலுவலர்கள் பொறியியல், மின்னணு, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றில் பயிற்சி பெற வழி வகுத்துள்ளது என்றார்.
கடற்படை நலன் மற்றும் ஆரோக்கியம் சங்க தலைவி கலா ஹரிக்குமார் கூறியதாவது:
கடற்படையில் பணியாற்றி அப்பாவை இழந்த 3 பிள்ளைகளுக்கு எஸ்ஆர்எம்மில் பி. டெக் பொறியியல் பட்டபடிப்பு படிக்க இடம் வழங்க எடுக்கப்பட்ட முடிவு மகிழ்ச்சிக்குரியது என்றார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாக கடற்படை அலுவலர்கள் பாதுகாப்பு ஆராய்ச்சி கல்வியில் முதுகலை பட்டபடிப்பு மற்றும் பி.எச்டி பட்டபடிப்பு மேற்கொள்ள உள்ளனர்.
அதோடு எஸ்ஆர்எம் மாணவர்கள், பேராசிரியர்கள் ரேடார் மற்றும் நுண்ணலை தொழில்நுட்பம், அட் வான்ஸ்டு கம்யூனிகேஷன் சிஸ்டம், அட்வான்ஸ்டு டிஜிட்டல் சிக்னல் தொழில்நுட்பம், பவர் எலக்ட்ரானிக்ஸ், கருவிகள் ஆராய்ச்சி, டேட்டா அறிவியல் மற்றும் இயக்குதல் ஆராய்ச்சி உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ளவும் அது சம்மந்தமான ஆராய்ச்சி பணிகளை இந்த இரு நிறுவனமும் சேர்ந்து மேற்கொள்ளவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
நிகழ்வில் எஸ்ஆர்எம் மருத்துவம் மற்றும் உடல்நலம் இணை துணை வேந்தர் லெப்டினெண்ட் கர்ணல் டாக்டர் ஏ. ரவிக்குமார், பதிவாளர் முனைவர் சு. பொன்னுசாமி,கூடுதல் பதிவாளர் முனைவர் டி. மைதிலி, பாதுகாப்பு மற்றும் சர்வதேச கல்வி ஆராய்ச்சி மையத்தின் ஆலோசகர் பேராசிரியர் வி. பி. நெடுஞ்செழியன் மற்றும் பல்வேறு துறைகளின் இயக்குனர்கள், டீன்கள் பங்கேற்றனர்.



