அகில இந்திய பேட் மிண்டன் போட்டியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சதீஷ்குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். அகில இந்திய சீனியர் ரேங்கிங் பேட்மிண்டன் போட்டி, உத்தரபிரதேச மாநிலம் பரெய்லி மாவட்ட பேட் மிண்டன் சங்கம் சார்பில் நடைபெற்றது.
வெள்ளிப் பதக்கம்
இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரர்- வீராங்கனைகள் விளையாடினர். இப்போட்டியில் தமிழகம் சார்பில் விளையாடிய, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் எம்.காம். ஐ.பி. துறை மாணவர் கே.சதீஷ்குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் நெம்பர் 1 வீரர் அலாப் மிஸ்ராவை 21-16, 21-14 என்ற செட் கணக்கிலும், காலிறுதிச் சுற்றில் அன்சல் யாதவை 21-14, 11-21, 21-18 என்ற செட் கணக்கிலும், அரையிறுதிச் சுற்றில் சுபாங்கரை 21-14, 19-21, 21-9 என்ற செட் கணக்கிலும் வீழ்த்தினார்.
இறுதிச்சுற்றில் இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக் கம் வென்றார். இவர் பேட்மிண்டன் உலகத் தர வரிசைப் பட்டியலில் 80-வது இடத்தில் உள்ளார்.
கே.சதீஷ்குமாருக்கு, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசுவாமி, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார், உடற்கல்வி இயக்குநர் முனைவர் கே.வடிவேலு, பன்னாட்டு வணிகத் துறைத்தலைவர் முனைவர் ஐ.பர்வீன் பானு ஆகியோர் பாராட்டி, வாழ்த்தினர்.



