கிரியேட் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம் இணைந்து சிவகாசி சுதர்சன் டிரைவிங் ஸ்கூல் ஏசி ஹாலில் இயற்கை முறை உணவுகளின் நுகர்வை அதிகப்படுத்துவதற்காக விழிப்புணர்வு பயிலரங்கம் நடத்தின.
கிரியேட் தலைவர் முனைவர் துரைசிங்கம் தலைமையில் தனி வட்டாட்சியர் ராஜீவ் காந்தி முன்னிலையில் நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியம் வரவேற்றுப் பேசினார்.
சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் பயிலரங்கத்தை துவக்கி வைத்து பேசுகையில், நாம் அன்றாட வாழ்வில் நவதானிய உணவுகளை சேர்த்துக் கொண்டால் நலமாக வாழலாம் என்றும் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்களை வாங்கி உண்பதால் நம் உடலுக்கு கேடு விளைவிக்கும் எனவும் நலமுடன் வாழ நாள்தோறும் ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இயற்கை முறை உணவுகளை நாம் நுகர்வதுடன் நம் பிள்ளைகளுக்கும் சொல்லித்தர வேண்டும் என்றும் கூறினார்.
மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வீரலட்சுமி, மனிதவள மேம்பாட்டு இயக்குனர் விஜயகுமார், தேன்கனி இயற்கை உழவர் வாரச்சந்தை கருப்பசாமி, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் செல்வராஜ் ஆகியோர் கருத்துரையுடன் முற்பகல் நிகழ்வு நிறைவு பெற்றது.
வெந்தயக்களி, உளுந்தங்களி கருப்பு கவுனி அரிசி தயிர் சாதம் ஆகியவை பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்டது.
உணவு இடைவேளைக்கு பின்பு நடைபெற்ற நிகழ்வில் நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையத்தில் மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரி பேசுகையில் இயற்கை மனம் மாறாமல் சுவையான சாம்பார் எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றி விளங்கிக் கூறினார். அஞ்சா கல்லூரி எஸ் எஃப் ஆர் கல்லூரி மாணவிகள் மற்றும் ஐசிடிஎஸ் ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர். கிரியேட் திட்ட இயக்குனர் சுரேஷ் கண்ணா நன்றி கூறினார்.



