கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் பெரும்பாலும் பொழுதுபோக்கை வீட்டுக்கு வெளியே கழித்து வந்தனர்.
மேலும் வீட்டில் உள்ள பெரியவர்கள், சிறியவர்கள், உறவினர்கள் இடையேயான உரையாடல், இணக்கம் அதிகமாக இருந்தது. ஆனால், 2010 ஆண்டு காலத்தில் செல்போன் மூலம் இணைய சேவை தொடங்கப்பட்டது முதல் இது குறைய தொடங்கிவிட்டது.
ஒரு வயது குழந்தை கூட செல்போனை பயன்படுத்த முனைகிறது. செல்போனில் வீடியோக்களை காட்டி குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் தாய்மார்கள் நிறைய பேர் உள்ளனர். குறிப்பாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் குழந்தைகள் தங்குதடையின்றி செல்போன்களை பயன்படுத்தும சூழல் உருவாகி வருகிறது.
இதனால் குழந்தைகளின் விளையாட்டு ஆர்வம் குறைந்து வருகிறது. மேலும் அவர்களின் கவனச் சிதறல் காரணமாக கல்வியில் நாட்டமும் குறைந்து, சிறு வயதிலேயே மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களை தடை செய்ய அந்நாட்டு பிரதமர் அந்தோணி ஆல்பனிஸ் முடிவு செய்துள்ளார். அவர் இது குறித்து சொல்லியிருக்கும் தகவல் ஊன்றி கவனிக்க வேண்டிய முக்கியச் செய்தியாகும்.
- செல்போன் உள்ளிட்ட சாதனங்களில் இருந்து குழந்தைகளை விலக்கி, அவர்களை விளையாட்டு மைதானங்கள், நீச்சல் குளங்கள், டென்னிஸ் மைதானங்களில் நாங்கள் பார்க்க விரும்புகிறோம்.
- உண்மையான சக மனிதர்களுடன் அவர்களின் அனுபவங்களை குழந்தைகள் பெற வேண்டியதை நாங்கள் விரும்புகின்றோம்.
- சமூக ஊடகங்கள் தீங்கு விளைவிப்பதாக இருக்கிறது. சில கருத்துக்கள், சில தகவல்கள் குழந்தைகளின் மன ஆரோக்கியத்தை தாக்குகின்றன. இது மிக கவலை அளிக்க கூடிய ஒன்று.
- எனவே சமூக ஊடகங்களை குழந்தைகள் பயன்படுத்துவதற்கு தடை செய்யும் சட்டத்தை இந்த ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
- இந்த தடை எந்த வயது குழந்தைகளுக்கு என்பது குறித்து சோதனை விரைவில் தொடங்கப்படும்.
இது தான் ஆஸ்திரேலியா நாட்டு பிரதமர் தெரிவித்துள்ள ஆழமான கருத்து.
செல்போன் மற்றும் சமூக தள ஊடகங்களின் தாக்கத்தில் சிக்காமல் குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு பெற்றோருக்கு குறிப்பாக தாய்மார்களுக்கு உண்டு. - ஆஸ்திரேலிய பிரதமரைப் பின்பற்றி, உலக நாடுகளை ஆளும் அதிபர்கள், பிரதமர்கள் அனைவருமே இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். இந்திய அரசும் மெத்தனம் காட்டாமல் நிபுணர்கள் குழு அமைத்து பரிசீலனை செய்யவேண்டும். சாத்தியமானதைச் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமூக ஊடகங்களில் இருந்து குழந்தைகளை காப்போம்!



