fbpx
Homeபிற செய்திகள்கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்குப்பட்ட பகுதிகளில் கோவை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்குப்பட்ட பகுதிகளில் கோவை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்குப்பட்ட, தேவராயபுரம், நல்லாட்டிபாளையம் ஆகிய ஊராட்சிகளில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகளையும், பிஎம் ஜன்மன் திட்ட வீடுகளையும், பிரதமரின் ஆவாஸ் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டும் வீடுகளையும் சொலம்பாளையம் ஊராட்சியில் நாற்றாங்கால் பண்ணையினையும், ஜமீன் ஊத்துக்குளியில் தோட்டக் கலைத்துறையின் சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் மானியத்தில் உயர் தொழில்நுட்ப பசுமை குடியில் அமைத்து வெள்ளரி பயிரிட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம், தேவராயபுரம் ஊராட்சி, சென்றாம்பாளையம் கிராமத்தில் பழங்குடியின மக்களுக்காக பிஎம் ஜன்மன் திட்டத்தின் கீழ் தலா ரூ.5.07 லட்சம் மதிப்பீட்டில் 28 வீடுகள் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வீடுகளை விரைவாகவும், தரமானதாகவும் கட்டி முடிக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், நல்லாட்டிபாளையம் ஊராட்சியில் 15வது மாநில நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் வட்டார பொது சுகாதார அலகு கட்டடத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் நல்லாட்டிபாளையம் ஊராட்சியில், பட்டணம் கிராமத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் 19 வீடுகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டதில், 5 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதையும், மீதமுள்ள 14 வீடுகள் கட்டும் பணிகள் நடை பெற்று வருவதையும், பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 13 வீடுகள் தலா ரூ.2.80 மதிப்பீட்டில் கட்ட அனுமதி அளிக்கப்பட்டதில், 8 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளதையும், மீதமுள்ள 5 வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதையும் மாவட்ட ஆட் சித்தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர் நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த வீட்டின் அளவுகள், பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் மற்றும் பயனாளிகள் தேர்வு உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்ததுடன், விரைவாக வீடுகள் கட்டும் பணிகளை முடித்திடவும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டார். மேலும், பொள்ளாச்சி நகராட்சி ராஜாமில் தெற்கு வடக்கு சாலை பகுதியில், நகர்ப்புற சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ், ரூ.25 லட்சம் மதிப்பில் கால்நடை மருத்துவமனை சாலை பகுதி முதல் திருவள்ளூர் திடல் சாலை வரை 550 மீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து, சொலவம்பாளையம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் நாற்றாங்கால் பண்ணையில், எலுமிச்சை, புங்கை, கொய்யா, வேம்பு, கொன்றை, பாதாம், பூவரசு, சீத்தா, வாகை, மாமரம் உள்ளிட்ட மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மரக்கன்று உற்பத்தியினை அதிகரிக்குமாறு வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அறிவுறுத்தினார்.

பின்னர், தோட்டக்கலைத் துறையின் சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்த விவசாயி செல்வராஜ் ரூ.16.88 லட்சம் மானியத்துடன் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப பசுமை குடில் அமைத்து வெள்ளரி சாகுபடி செய்துள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அதன் செயல்பாடுகள் குறித்து விவசாயிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது துணை இயக்குநர் தோட்டக் கலைத் துறை சித்தார்த்தன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஆனந்தகுமார், தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநர் (பொள்ளாச்சி தெற்கு) சௌமியா, உதவி தோட்டக்கலை அலுவலர் ஆறுச்சாமி, கிணத்துக்கடவு வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன்பாபு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரேவதி, பொள்ளாச்சி நகராட்சி இளநிலை பொறியாளர் அப்புசாமி, பணி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img