fbpx
Homeபிற செய்திகள்விண்ணில் வெற்றி கண்ட இஸ்ரோவின் ‘பாகுபலி’!

விண்ணில் வெற்றி கண்ட இஸ்ரோவின் ‘பாகுபலி’!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ பல்வேறு தகவல்தொடர்பு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. அந்த வரிசையில், ஜிசாட் -7 ஆர் என்று அழைக்கப்படும் 4,410 கிலோ எடை கொண்ட சிஎம்எஸ் 03 என்ற கடற்படைக்கு தேவையான தகவல்தொடர்பு செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

இது இந்திய மண்ணில் இதுவரை ஏவப்பட்டதில் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் ஆகும். இதற்காக எல்விஎம் 3 எம்5 ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது. இதில் ஏவப்பட்ட சிஎம்எஸ்-03 செயற்கைக்கோளானது 4,410 கிலோ எடை கொண்டது. இதுவரை புவிவட்டப் பாதையில் ஏவப்பட்ட செயற்கை கோள்களில் இது அதிக எடை கொண்டதால் “பாகுபலி” என்று செல்லமாக வர்ணிக்கின்றனர்.

ஏவுகணையில் இருந்து சிஎம்எஸ்-03 வெற்றிகரமாக பிரிந்து, மிஷன் வெற்றி அடைந்துள்ளது. இச்சாதனை இந்திய விண்வெளிச் சக்திக்கு ஒரு புதிய சகாப்தம் ஆகும். முன்னதாக பிரான்ஸ் நாட்டின் கயானாவில் இருந்து கடந்த 2018 ஆம் ஆண்டு ஏரியன் 5 என்ற ராக்கெட் மூலம் ஜிசாட்-11 என்ற பிரம்மாண்ட செயற்கைக்கோள் இஸ்ரோ மூலம் ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோளின் எடை 5,854 கிலோ. அதன்பிறகு தற்போது இந்திய மண்ணில் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளது. நேற்று ஏவப்பட்டுள்ள பாகுபலி ராக்கெட்டின் நீளம் 43.5 மீட்டர்.

இஸ்ரோவின் விண்வெளிப் பயணம் இத்துடன் நின்றுவிடவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில், இஸ்ரோ தலைவர் வி.நாராயணன், சந்திரயான்-4 மற்றும் சந்திரயான்-5 திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், அத்துடன் 2035-க்குள் இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையம் அமைக்கும் திட்டமும் உள்ளது என்றும் தெரிவித்தார்.

சந்திரயான்-4, இந்தியாவின் முதல் வீனஸ் ஆர்பிட்டர் மிஷன் ஆகச் செயல்பட்டு, வெள்ளிக் கிரகத்தின் மேற்பரப்பை ஆராயும். மேலும், மூன்று விண்வெளி வீரர்களை 400 கிலோமீட்டர் சுற்றுப்பாதைக்கு அனுப்பி, மூன்று நாட்களுக்குப் பிறகு பாதுகாப்பாகத் தரையிறக்கும் லட்சியமிக்க ககன்யான் மனித விண்வெளிப் பயணத்திற்கும் இஸ்ரோ தீவிரமாகத் தயாராகி வருகிறது.

ஒவ்வொரு வெற்றியும் உலக விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துகிறது, விண்வெளித் தொழில்நுட்பத்தில் சுய-சார்பு என்ற லட்சிய இலக்கை நோக்கி நம் நாட்டைக் கொண்டு செல்கிறது என்றால் மிகையன்று.


வல்லரசு நாடுகளுடன் போட்டி போடும் அளவிற்கு விண்வெளியில் மாயாஜாலம் காட்டும் நமது இஸ்ரோவை எத்தனை பாராட்டினாலும் தகும். அதன் தலைவர் நாராயணனுக்கும் சக விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துகள் – பாராட்டுகள்!

படிக்க வேண்டும்

spot_img