fbpx
Homeதலையங்கம்கேப்டன் ரோஹித் சர்மா வரலாற்றுச் சாதனை!

கேப்டன் ரோஹித் சர்மா வரலாற்றுச் சாதனை!

2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றது. அதில் பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் அயர்லாந்து ஆகிய மூன்று அணிகளையும் வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. சூப்பர் 8 சுற்றிலும் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகளையும் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது.

உலகக்கோப்பை சாம்பியன் அணியான இங்கிலாந்தை அரை இறுதியில் சந்தித்தது இந்தியா. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து 103 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதை அடுத்து இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.

முதலில் 2007 டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா விளையாடியது. அதில் கோப்பையும் வென்றிருந்தது. அதன் பின் 2009, 2010 மற்றும் 2012 ஆகிய மூன்று டி20 உலக கோப்பைகளில் இந்திய அணி சூப்பர் 8 சுற்று வரை முன்னேறியது. அடுத்து 2014 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி இறுதிப்போட்டியில் இலங்கை அணியை சந்தித்து தோல்வி அடைந்திருந்தது.

அதன் பின் இந்திய அணியால் டி20 உலக கோப்பைகளில் இறுதிப் போட்டிக்கு கூட முன்னேற முடியவில்லை. 2016 இல் அரை இறுதி சுற்று வரையும், 2021 இல் சூப்பர் 12 சுற்று வரையும் முன்னேறியது. 2022 இல் அரை இறுதியுடன் வெளியேறி இருந்தது.

இந்த நிலையில் 2024 டி20 உலகக் கோப்பையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. இந்தியா இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை சந்திக்க உள்ளது.

இந்த வெற்றியே ரோஹித் சர்மா படையின் வரலாற்று சாதனையாகப் பார்க்கப்படுகிறது. நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி டி20 உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றும் இமாலய சாதனை நிகழும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் சாதனைகள் தொடர வாழ்த்துகள்!

படிக்க வேண்டும்

spot_img