தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்களின் நலனுக்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டம் ஆகியவைகள் மூலம் பொது மக்களுக்குத் தேவையான மருத்துவ சேவைகள் வழங்கி வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் 02.08.2025 அன்று காணொளி காட்சி வாயிலாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தினை துவக்கி வைத்தார்.
இம்முகாமில் பல்வேறு வகை சிறப்பு மருத்துவ சேவைகள், புற்று நோய் கண்டறியும் பரிசோதனைகள், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை வழங்குதல், அமைப்பு சார தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை வழங்குதல், இரத்த பரிசோதனை, இ.சி.ஜி, எக்கோ, எக்ஸரே, யூஎஸ்ஜி, சளி பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை மற்றும் மார்பக புற்றுநோய் உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும், இம்மருத்துவ முகாமில் பொதுமருத்துவம், பொது அறுவைசிகிச்சை, எழும்பு முறிவு, மகப்பேறு மருத்துவம், குழந்தைநலம், இருதயத்துறை, நரம்பியல் துறை, தோல் சிகிச்சை, என பல சிகிச்சைகள் அளிக்கப்படவுள்ளது.
நலம் காக்கும் ஸ்டாலின் முகாமிற்கு வரும் அனைவருக்கும் இரத்த யூரியா அளவு, இரத்த கிரியேட்டினைன் அளவு ஆகியன கட்டாயமாக எடுக்கப்படுகிறது. 40 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ECG கட்டாயமாக எடுக்கப்படுகிறது. 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு கர்ப்பபை வாய்புற்று நோய் பரிசோதனை, மார்பக புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மகப்பேறு மருத்துவத்திற்கு சிறப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை திருப்பூர் மாவட்டத்தில் 7 நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. சராசரியாக 1000-க்கும் மேற்பட்ட பயனாளிகள் ஒவ்வொரு முகாமிலும் பயனடைந்துள்ளனர். முதல் முகாம் வெள்ளகோவில் வட்டாரத்தில் 02-08-2025 அன்று நடைபெற்றது. அதில் 1092 பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றுள்ளனர். இரண்டாவது முகாம் திருப்பூர் மாநகராட்சியில் 09-08-2025 அன்று நடைபெற்றது. அதில் 1272 பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றுள்ளனர்.
மூன்றாவது முகாம் பல்லடம் வட்டாரத்தில் 23-08-2025 அன்று நடைபெற்றது. அதில் 1670 பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றுள்ளனர். நான்காவது முகாம் திருப்பூர் (பெருமாநல்லூர்) வட்டாரத்தில் 30-08-2025 அன்று நடைபெற்றது. அதில் 1258 பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றுள்ளனர். ஐந்தாவது முகாம் சின்னக்காம்பாளையம் வட்டாரத்தில் 06.09.2025 அன்று நடைபெற்றது. அதில் 1712 பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றுள்ளனர். ஆறாவது முகாம் மூலனூர் வட்டாரத்தில் 13.09.2025 அன்று நடைபெற்றது. அதில் 1458 பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றுள்ளனர். ஏழாவது முகாம் காங்கேயம் வட்டாரத்தில் (20.09.2025) அன்று நடைபெற்றது. அதில் 1,793 பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றள்ளனர் என மொத்தம் இது வரை 10,255 நபர் பயன்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் காங்கேயம் கார்மல் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாமில் தேசிய குழந்தைகள் நலத்திட்டத்தின் கீழ் இருதய நோய் கண்டறியப்பட்டு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் மூலமாக இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட 02 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நலப் பெட்டகங்களை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வழங்கினார்கள்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் நகராட்சி பகுதியை சேர்ந்த குழந்தை யாழினியின் தயார் இசைப்பிரியா கூறுகையில், “என் பெயர் இசைப்பிரியா. நான் குடும்பத்துடன் காங்கேயம் நகராட்சி, பழையகோட்டை சாலை பகுதியில் வசித்து வருகிறோம். எனது கணவர் பெயர் ரமேஷ், தனியார் அரிசி ஆலையில் பணிபுரிந்து வருகிறார். எங்களது குழந்தை யாழினிக்கு 1 வருடம் 2 மாதங்கள் ஆகிறது. இச்சூழ்நிலையில் பழையகோட்டை அங்கன்வாடி மையத்தில் காங்கேயம் வட்டார RBSK குழுவினர் குழந்தைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளவுள்ளார்கள் என அங்கன்வாடி பணியாளர் தெரிவித்தார்கள். அதன்படி எங்களது குழந்தையை பரிசோதனைக்கு அழைத்து சென்றோம். காங்கேயம் வட்டார RBSK
குழுவினர் எங்களது குழந்தையை பரிசோதனை மேற்கொண்ட போது பிறவி இருதய குறைபாடு இருந்தது கண்டறியப்பட்டது.
தொடர்ந்து, மாவட்ட தொடக்க தலையீட்டு மையத்திற்கு RBSK குழுவினர் அழைத்து சென்று மீண்டும் பரிசோதனை மேற்கொண்டபோது ரூ.5.00 லட்சம் செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்தார்கள். மிகுந்த மன வேதனைக்கு உள்ளானோம். அத்தகைய சூழ்நிலையில் தமிழ்நாடு அரசின் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் மூலமாக அறுவை சிகிச்சை செய்து கொள்ள அரசு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினார்கள். அதன்படி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் மூலமாக ரூ.5.00 லட்சம் செலவில் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது எங்களது குழந்தை மிகவும் நலமாக இருக்கிறார். மேலும், தற்போது எங்களது குழந்தையை தொடர்ந்து மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி யினை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
தொகுப்பு:
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திருப்பூர் மாவட்டம்.



