fbpx
Homeதலையங்கம்இலவச பேருந்து பயணம்: சவாலை ஏற்பாரா மோடி?

இலவச பேருந்து பயணம்: சவாலை ஏற்பாரா மோடி?

தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி மலர்ந்ததும் பெண்களின் வாழ்வில் வெளிச்சம் ஏற்படுத்தும் வகையில் பேருந்துகளில் அவர்கள் இலவசமாக பயணிக்கும் விடியல் பயண திட்டம் அமல்படுத்தப்பட்டது.

அதன்பிறகு பெண்கள் மகிழ்ச்சியாக அரசுப்பேருந்துகளில் சென்று வருகிறார்கள். இதனால், சராசரியாக பெண் ஒருவருக்கு மாதம் ரூ.800 சேமிக்க உதவுகிறது. இந்த பணம் அவர்களது குடும்பத்திற்கு சத்தான உணவுகளை வாங்குவது முதல் பல அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தை உலக நாடுகள் பலவும் வரவேற்றுப் பாராட்டி உள்ளன.

கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் இலவச பேருந்து பயண திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் சில மாநிலங்களும் இத்திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்டி வருகின்றன.
இந்நிலையில் தொடர்ச்சியாகவே இலவச திட்டங்களை கொச்சைப்படுத்தி வரும் பிரதமர் மோடி தற்போது மீண்டும் மகளிர் வாழ்க்கையில் வெளிச்சத்தை ஏற்படுத்தியுள்ள இலவச பேருந்து திட்டத்தை விமர்சித்துள்ளார்.
`இலவச பேருந்து பயண திட்டத்தால் மெட்ரோ ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று அவர் கூறி இருக்கிறார்.

பிரதமர் மோடி சொல்வது போல் மெட்ரோ ரயில்களில் பயணிகளில் எண்ணிக்கை குறைகிறதா? என்று பார்த்தால் அப்படி ஒன்றும் இல்லை. தமிழ்நாட்டில் இலவச பேருந்து திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகும் கூட சென்னையில் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் வருகிறதே ஒழிய குறையவில்லை.
கோவிட் காலமான 2021ல் மெட்ரோ ரயிலில் 2.53 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். 2022ல் 6.09 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். 2023ம் ஆண்டில் இது 9.11 கோடியாக உயர்ந்துள்ளது.
ஆண்டுக்கு ஆண்டு மெட்ரோ ரயில் பயணிகள் எண்ணிக்கை கோடிக்கணக்கில் அதிகரித்திருக்கிறதே தவிர குறையவில்லை. மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட இந்த புள்ளி விபரங்களே அதற்கு அத்தாட்சி.
ஆனால் பிரதமர் மோடி இந்தப் புள்ளி விவரங்களைக்கூட அறியாமல் பொத்தாம் பொதுவாக இலவச மகளிர் பயணத் திட்டத்தை பொய்யாக விமர்சித்து தாக்குதல் தொடுத்திருக்கிறார்.

நியாய விலைக்கடைகளில் அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இலவசமாகத் தான் வழங்கப்பட்டு வருகிறது. அது ஏன்? ஏழை & நடுத்தர மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த அரசு செய்யும் உதவி தானே தவிர வேறல்ல.
அதேபோன்றது தான் இலவச மகளிர் பேருந்து பயணத் திட்டமும். ரேஷனில் இலவசமாக பொருட்கள் வழங்குவதையும் பிரதமர் மோடியால் எதிர்க்க முடியுமா?
சென்னையில் இரண்டு வழித்தடங்களில் மட்டும் தான் மெட்ரோ இரயில் இயங்குகிறது. மகளிர் இலவச பேருந்து பயணம் தமிழகத்தின் மூலைமுடுக்குகளில் இருக்கிற அனைவருக்கும் பலனளிக்கிறது. பிரதமரே இத்திட்டத்தினை விமர்சித்து இருப்பது வேதனை தருகிறது.

பிரதமர் மோடியின் விமர்சனம் பொய்யானது என பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தற்போது பேருந்து சேவையால் மெட்ரோ சேவை பாதிக்கப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்க முடியுமா? என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சவால் விடுத்துள்ளார்.
இந்த சவாலை பிரதமர் மோடி ஏற்பாரா?

படிக்க வேண்டும்

spot_img