கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அரசு மகளிர் மேல்நலைப்பள்ளியில் 220 மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை மதியழகன் எம்எல்ஏ., வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம பர்கூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பர்கூர் எம்எல்ஏ.,வுமான மதியழகன் பங்கேற்று, 220 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து பர்கூர் தொகுதி பாலிநாயனப்பள்ளி ஊராட்சி செட்டிப்பள்ளி – அழகியபுதூர் கிராமத்தில் குழந்தை நேய பள்ளி உட்கட்மைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.30.45 லட்சம் மதிப்பீட்டில் செட்டிப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் ரூ.30.75 லட்சம் மதிப்பீட்டில் அழகியபுதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளுக்கு புதிய கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. அதை மதியழகன் எம்எல்ஏ., குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து, இனிப்புகளை வழங்கினார்.
அதேபோல குண்டியால்நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடத்தையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தையும் திறந்து வைத்தார்.
மேலும் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சத்தில் ஒப்பதவாடி சாலை முதல் பாரதகோயில் வரை தார் சாலை, ரூ.34.92 லட்சத்தில் புதுரோடு தேசிய நெடுஞ்சாலை முதல் நெல்லிகான் வட்டம் வரை தார் சாலை, ரூ.9.85 லட்சத்தில் குண்டியால்நத்தம் தேசிய நெடுஞ்சாலை முதல் ஜெயராமன் வட்டம் வரை தார் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
இதே போல மல்லப்பாடி ஊராட்சியில் ரூ.44 லட்சத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு புதிய 3 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. அதை மதியழகன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பர்கூர் பேரூராட்சி தலைவர் சந்தோஷ்குமார், ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், அறிஞர், பர்கூர் பேரூர் திமுக செயலாளர் வெங்கட்டப்பன், பொதுக்குழு உறுப்பினர் பாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.